சிறப்பு செய்திகள்

6 ஆயிரம் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

திருவாரூர்

வெளிச்சந்தையில் வெங்காயம் விலை அதிகமாக இருப்பதால் 6 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

திருவாருர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று அ.ம.மு.க., தி.மு.க.,. காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்தவர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி அமைச்சர் காமராஜ் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு அமைச்சர் துண்டு அணிவித்து பாராட்டு தெரிவித்தார். அப்போது அவர்கள் மத்தியில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற நீங்கள் அனைவரும் அயராது பாடுபட வேண்டும். தமிழக மக்களுக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி உள்ளார். அவர் வழியில் செயல்படும் இந்த அரசும் தொடர்ந்து அம்மாவின் திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாது இந்த ஆண்டு நல்ல மழை பெய்து மாநிலம் முழுவதும் செழிப்புடன் இருக்கிறது. எனவே வருகின்ற தேர்தலில் அம்மாவின் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்லி கழகத்தின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பொங்கல் தொகுப்பு மற்றும் சிறப்பு நிதி தமிழகம் முழுவதும் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. அதற்காக முன்கூட்டியே முதலமைச்சர் இத்திட்டத்தை தொடங்கி வைத்து விட்டார். வெகு விரைவில் அனைத்து ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு, சிறப்பு பரிசாக ரூ.1000 வழங்கப்படும். இலவச வேட்டி, சேலையும் அப்போது வழங்கப்பட உள்ளது.

வெங்காய விலையை பொறுத்தவரை இது தற்காலிகமானது தான். வெங்காயம் அதிகம் உற்பத்தி செய்யப்படும் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மழை அதிகமாக இருந்ததால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வெங்காயம் பெருமளவு அழுகி போய் விட்டது. அதனால் வெங்காய விலை வரத்து குறைந்து விட்டது.

அதனால் தான் வெங்காயம் விலை அதிகரித்துள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயத்தை விலைக்கு வாங்கி ரேஷன் கடைகள் மூலம் அவற்றை குறைந்த விலையில் விற்பனை செய்ய அரசு முடிவு செய்திருக்கிறது. இன்னும் சில தினங்களுக்குள் வெங்காயம் வரவழைக்கப்பட்டு ரேஷன் கடைகளில் அவை விற்பனை செய்யப்படும்.

தமிழகத்தில் 6 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. ஜனவரி மாதம் முதல் வெங்காயம் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.