சிறப்பு செய்திகள்

60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி – முதலமைச்சர் ஆணைகளை வழங்கி துவக்கி வைத்தார்…

சென்னை :-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 2000 ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக 32 தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 அவர்களுடைய வங்கிக் கணக்கில் சேரும் வகையில் அதற்கான நிர்வாக அனுமதி ஆணைகளை வழங்கினார்.

இது குறித்த அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

புரட்சித்தலைவி அம்மா வகுத்துத் தந்த பாதையில் உறுதியாக நடக்கும் அம்மாவின் அரசு, ஏழை, எளிய மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.

பல மாவட்டங்களில் ‘கஜா’ புயலின் தாக்கத்தினாலும், தமிழ்நாடு முழுவதும் பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள்,

மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், இதனால், கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், என மொத்தம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப் பெற்று பயனடைவர் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 11.2.2019 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிக்கையில் அறிவித்தார்.

அதன்படி, ஏழை, எளிய மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதி உதவி வழங்கும் இத்திட்டத்தினை 32 தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.2000 அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான நிர்வாக அனுமதி ஆணைகளை வழங்கி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் முனைவர் டி.கார்த்திகேயன், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் கே.பாஸ்கரன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.பி.கார்த்திகா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர் ஜெ. கணேஷ் கண்ணா மற்றும் அரசு உயர்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.