தற்போதைய செய்திகள்

7 பேர் விடுதலை விவகாரம் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி…

விருதுநகர்

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

இருக்கன்குடியில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது தமிழக அரசா, ஆளுநரா என்று வைகோ கேட்கிறார். ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. மத்திய அரசுடன் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி 7 பேருக்கும் கழக அரசால் மட்டுமே விடுதலை வாங்கித் தர முடியும். வைகோ தற்போது ஒரு சூழ்நிலை கைதியாக உள்ளார். எனவே தான் அவர் தி.மு.க.வை உயர்த்தி பேசி வருகிறார். தி.மு.க. கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவரும் பிரச்சினைக்குரியவர்களாக இருப்பதால் அந்த கூட்டணியே பிரச்சினைக்குரிய கூட்டணிதான். ஏழை, எளிய மக்கள் எல்லா பலனும் பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் தொடங்கப்பட்ட கூட்டணி தான் அ.இ.அ.தி.மு.க..- பா.ஜனதா கூட்டணி.

மக்கள் நீதி மய்யம் தேர்தல் களத்திலேயே கிடையாது. தேர்தல் களத்தில் அ.இ.அ.தி.மு.க..- தி.மு.க. கூட்டணி மட்டும் உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வாய் அசைத்தால் வரலாறு. நாவசைத்தால் அது புறநானூறு. இது தான் விதி. தினகரன் கட்சி மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பிரிந்தவர்கள் தற்போது கழகத்தில் சேர்ந்து வருகிறார்கள். 40 நாடாளுமன்ற தொகுதி, 21 சட்டமன்ற தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி. அவர் சொன்னால் சொன்னது தான். அவர் ஒரு தடவை சொன்னால் அது நூறு தடவை சொன்ன மாதிரி. எங்கள் கூட்டணி மெகா கூட்டணி. வெற்றிக் கூட்டணி.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.