தற்போதைய செய்திகள்

70 வகை சீர்வரிசைப் பொருட்களுடன் 120 ஜோடிகளுக்கு இலவச திருமணம் – கழக முன்னோடிகள்- அமைச்சர்கள் பங்கேற்பு…

திருவாரூர்:-

திருவாரூரில் நாளை 70 வகை சீர்வரிசைப் பொருட்களுடன் 120 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெறுகிறது. இதில் கழக முன்னோடிகள், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

திருவாரூர் மாவட்டக் கழக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட கழகம் சார்பில் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த மணமக்களின் திருமணங்கள் நடத்தி வைத்தல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்டக் கழகம் சார்பில் நாளை (22.2.2019) காலை 9.30 மணிக்கு திருவாரூர் வன்மீகபுரம் அம்மா அரங்கில் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த 120 ஜோடி மணமக்களின் திருமண விழா நடைபெறுகிறது. மணமக்களுக்கு தங்கத்தாலி, பட்டுப் புடவை, வேட்டி உள்ளிட்ட 70 வகையான திருமண சீர்வரிசைப் பொருட்கள் மாவட்டக் கழகம் சார்பில் வழங்கப்பட உள்ளது.

இந்த விழாவிற்கு திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான இரா.காமராஜ் தலைமை வகிக்கிறார்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாகை கே.கோபால், தஞ்சாவூர் கு.பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திருமண நிகழ்ச்சியில் கழக துணை ஒருங்கிணைப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், இரா.துரைக்கண்ணு, வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பிற அணி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். முன்னதாக மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முகமது அஸ்ரப் வரவேற்கிறார். திருவாரூர் நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி நன்றி கூறுகிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அமைச்சர் ஆர்.காமராஜ் மேற்பார்வையில் கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.