தமிழகம்

8-ம்தேதி கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – தலைமைக் கழகத்தில் நடைபெறுகிறது

சென்னை :-

சென்னையில் 8-ம்தேதி அ.இ.அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதையொட்டி தேர்தல் பணிகள், பூத் கமிட்டிகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அ.இ.அ.தி.மு.க. தலைமை கழகத்தில் வருகிற 8-ம்தேதி மாலை 4.30 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடபெறுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகின்றனர்.

நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்பதால், தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளில் கழகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் பணியை கழகம் ஏற்கனவே தொடங்கி விட்டது. முதல் கட்டமாக, கடந்த 4-ம்தேதி தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் விருப்பமனு வினியோகத்தை கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஏற்கனவே அ.இ.அ.தி.மு.க. சார்பில் கூட்டணி குறித்து பேச குழு, பிரச்சார ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு என தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியும் துவங்கியது. இதனை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த, வரும் 8-ந்தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு, பூத்கமிட்டி அமைப்பு, தேர்தல் யுக்தி, வெற்றிவாய்ப்பு குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.