சிறப்பு செய்திகள்

உள்ளாட்சித்தேர்தலிலும், 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் இமாலய வெற்றியை ஈட்டுவோம் – ஒருங்கிணைப்பாளர்கள் சூளுரை

சென்னை:-

உள்ளாட்சித்தேர்தலிலும், 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் இமாலய வெற்றிகளை ஈட்டுவோம் என்று கழக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் தலைமைக்கழகத்தில் காலை 10 மணிக்கு தலைமைக்கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக செய்தி தொடர்பாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை ஏற்று ஆலோசனை வழங்கினார். கழக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் எம்.பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தின் போது தேர்தலில் மிகக்கடுமையாக உழைத்து 9 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியை ஈட்டித்தந்த நிர்வாகிகளுக்கும், கழக தொண்டர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றிபெற்ற தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருக்கு வாழ்த்தும், அந்த வெற்றியை தந்த தேனி நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

வெறும் தேர்தலோடு நிறைவுற்று விடுகிற கூட்டணியாக இல்லாமல், பாரத பிரதமரை வழிமொழிகிற உயரிய பெருமையை கழகத்தினருக்கு வழங்கிய பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.அம்மாவின் வழியில் நடக்கும் கழக அரசே நீடிக்க வேண்டுமென திடமான தீர்ப்பு எழுதிய தமிழக மக்களுக்கு உளமார நன்றி தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து எதிர்காலத்தில் உள்ளாட்சி தேர்தலிலும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் இமாலய வெற்றிகளை குவித்திட ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ஒருமனதாக சூளுரையாற்றினர்.

அதைத்தொடர்ந்து கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் – 1
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலிலும், 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கும், கழகத்தின் தலைமையில் அமைந்த கூட்டணியின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை இந்தக் கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் – 2
நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காகவும், சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட்ட கழக வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் அரும்பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும்; தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு உழைத்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும்; தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் நல்லாதரவு வழங்கிய அமைப்புகள் அனைத்திற்கும் இந்தக் கூட்டம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் – 3
நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அறுதிப்பெரும்பான்மைக்கும் கூடுதலான இடங்களில் வெற்றி பெற்று, பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாக, மீண்டும் பாரதப் பிரதமராக பதவியேற்றதற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் இந்தக் கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் – 4
நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி, இந்திய தேசத்தின் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அளித்தமைக்கு இந்தக் கூட்டம் தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் – 5
தமிழ் நாட்டில் விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சிறப்புடன் பணியாற்றி, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா தலைமையில் பெற்றதைப் போன்ற மகத்தான வெற்றியைப் பெற்றிட இந்தக் கூட்டம் உறுதி ஏற்கிறது. உள்ளாட்சி மன்றத் தேர்தல் பணிகளை உடனடியாகத் தொடங்கி மக்கள் மனங்களை வென்றெடுக்க இந்தக் கூட்டம் சூளுரைக்கிறது.

தீர்மானம் – 6
தமிழ் நாட்டின் தன்னிகரில்லா மக்கள் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வகுத்துத் தந்த ஏழை, எளியோருக்கும், தாய்க்குலத்திற்கும் தொண்டாற்றும் தூய அரசியல் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவும், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா வழியில் மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு, தமிழக மக்கள் எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ்ந்திடும் வண்ணம் செயல்படவும் இந்தக் கூட்டம் உறுதி ஏற்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.