சிறப்பு செய்திகள்

அ.தி.மு.க.வின் வெற்றி தொடரும் – பேரவையில் முதலமைச்சர் முழக்கம்

சென்னை

சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திமுகவின் நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பேசியதாவது:-

நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்றோம் என்று சொன்னீர்கள். ஏன் இடைத்தேர்தலில் நீங்கள் தோற்றீர்கள். விக்கிரவாண்டியிலும், நாங்குநேரியிலும் எவ்வளவு வாக்குகள் வித்தியாசம், உங்களிடம் இருந்த தொகுதிகள் அவை. உண்மை நிலையை புரிந்து, பேச வேண்டும். நான் ஏற்கனவே பலமுறை சட்டமன்றத்திலும், வெளியிலும் பேசியிருக்கிறேன்.

நாடாளுமன்ற தேர்தலின் போது என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தீர்கள் என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலிலும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் மக்கள் உண்மையை புரிந்து கொண்டார்கள். அதனால் மிகப்பெரிய வெற்றியை மக்கள் எங்களுக்கு தந்தார்கள்.

அதேவேளையில், வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் பிரச்சாரம் செய்யும் போது, ஏற்கனவே வாங்கிய வாக்குகளை விட கூடுதலாக வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் ஜெயிப்போம், லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்போம் என்று சொன்னீர்கள். ஆனால் வெறும் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றீர்கள்.

அதாவது 0.6 சதவிகிதத்தில் தான் வெற்றி பெற்றீர்கள். அப்பொழுது கூட, வேலூர் நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த 6 சட்டமன்ற தொகுதிகளில், 3 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக அதிக வாக்குகளை பெற்றது. 3 சட்டமன்றத் தொகுதிகளில் தான் நீங்கள் அதிக வாக்குகளை பெற்றீர்கள். குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலில் உங்களுடைய வேட்பாளர் 28,000 வாக்குகள்வித்தியாசத்தில் ஜெயித்தார்.

அண்மையில் நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 12,000 வாக்குகள் அதிகம் பெற்றது. அணைக்கட்டில் 2016-ல் அதிக ஓட்டுக்களை பெற்று திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். அதே தொகுதியில், அண்மையில் நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் குறைந்த வாக்குகள் அதாவது 9,500 வாக்குகள் குறைவாக பெற்றிருக்கிறீர்கள். ஆக, மக்களுடைய செல்வாக்கு எங்களுக்கு கூடி இருக்கிறதே தவிர, குறையவில்லை.

ஆகவேதான், உங்களிடத்தில் இருந்த விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியை மக்கள் எங்களிடத்திலே வழங்கி இருக்கிறார்கள். நாங்குநேரியை காங்கிரசிடமிருந்து மக்கள் எங்களிடத்திலே வழங்கி இருக்கிறார்கள். மக்களிடத்தில் எங்களுடைய செல்வாக்கு எப்பொழுதும் சரியவில்லை. நீங்கள் நாடாளுமன்ற தேர்தலின் போது நிறைவேற்ற முடியாத கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்த காரணத்தினால் தான் அந்த வாக்குகளை பெற்றீர்கள்.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால்,என்னுடைய சொந்த பஞ்சாயத்து அங்கே ஓட்டு குறையவே இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் 142 வாக்குகள் குறைவாக பெற்றோம். அதுவும் எதற்காக என்றால், எங்கள் பகுதி முழுவதும் விவசாயம் நிறைந்த பகுதி. வேளாண் பெருமக்கள்நிறைந்த பகுதி. நீங்கள் என்ன அறிவிப்பு கொடுத்தீர்கள்?

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி, கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடன்கள் முழுவதும் தள்ளுபடி, ஐந்து சவரனுக்கு கீழே வாங்கிய நகைக் கடன்களும் தள்ளுபடி, தனியார் வங்கிகளில் வாங்கிய கடன்கள் கூட தள்ளுபடி என்று கூறி, பிரச்சாரம் செய்தீர்கள். ஆக, இதையெல்லாம் மக்கள் நம்பி உங்களுக்கு வாக்கு அளித்தார்கள்.

இப்பொழுது அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் என்னுடைய சொந்த கிராமத்தில், ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 2220 வாக்குகள் அதிகமாகவும், மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 1809 வாக்குகள் அதிகமாகவும் பெற்றுள்ளோம். உண்மை மக்களுக்கு தெரிந்தது. உண்மை தெரிந்த காரணத்தினால் மக்கள் எங்களை ஆதரித்து, இவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறோம். எந்த காலத்திலும் அதிமுகவுக்கு சரிவில்லை, என்றைக்கும் வெற்றி தான். என்றார்.

தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சில கருத்துக்களை தெரிவித்தார்.

இதற்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 2021-ல் தெரிவிக்க வேண்டியதை இப்பொழுது எதற்கு தெரிவித்தீர்கள். அதுவும்
நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் எதற்கு தெரிவித்தீர்கள். உங்களால் நிறைவேற்ற முடியாது. நீங்கள் ஆட்சியில் இல்லை. ஆட்சியில் இல்லாத போது கவர்ச்சிகரமான திட்டங்களை மக்களை ஏமாற்றுவதற்காக தானே அறிவித்தீர்கள். 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது நீங்கள் வாக்குறுதி கொடுக்கலாம், அதில் நியாயம் இருக்கிறது. வெற்றி பெற்றால் நிறைவேற்றலாம் என்று, ஆனால் இப்பொழுது ஆட்சியில் இருப்பது அதிமுக.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.