தற்போதைய செய்திகள்

ரூ.30 லட்சத்தில் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடம் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்…

நாகப்பட்டினம்:-

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் தெத்தி கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள “அம்மா பூங்கா” மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்.

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் தெத்தி கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள “அம்மா பூங்கா” மற்றும் உடற்பயிற்சிக் கூடம் திறப்பு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் சீ.சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு அம்மா பூங்காவையும், உடற்பயிற்சி கூடத்தையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ், கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கி இயக்குநர் தங்க.கதிரவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஐவநல்லூர், பாலையூர், மஞ்சக்கொல்லை மற்றும் நாகப்பட்டினம் நகராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இப்பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைந்துள்ளது. இப்பூங்கா வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு, புல்வெளிகளை சீரமைக்கவும், பூங்காவை பராமரித்திட தகுதிவாய்ந்த நபர் ஒருவரை நியமித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தில் உள்ள விளையாட்டுக் கருவிகளில் அவ்வப்போது ஏற்படும் பழுதை சரிசெய்திடவும், புதிய விளையாட்டுக் கருவிகள் வாங்கவும், ஊராட்சி பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கவும் நடவடிக்கை மேந்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை வயது வித்தியாசமின்றி ஆண், பெண் இருபாலரும் நடைபயிற்சி, உடற்பயிற்சி மற்றும் மாலை நேரங்களில் குழந்தைகளின் விளையாட்டு, முதியோர்கள் பொழுதுபோக்கிற்காக அமர்ந்து உரையாடுதல் போன்றவற்றிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.