சிறப்பு செய்திகள்

வேளாண்துறைக்கு 4 ஸ்காச் வெள்ளி விருதுகள்: முதல்வரிடம் காண்பித்து அமைச்சர் வாழ்த்து பெற்றார்

சென்னை

வேளாண் துறைக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட 4 ஸ்காச் வெள்ளி விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் அமைச்சர் இரா.துரைக்கண்ணு காண்பித்து வாழ்த்து பெற்றார்.

புதுடெல்லியில் 11.1.2020 அன்று நடைபெற்ற ஸ்காச் விருது வழங்கும் விழாவில், கடலூர் மாவட்டம், பரங்கிபேட்டை வட்டாரத்தில் களர் மற்றும் உவர் தன்மை கொண்ட வளம் குன்றிய 1,100 எக்டர் நிலப்பரப்பில், அதன் உற்பத்தி திறனை மீட்கும் பொருட்டு, 2016-17 ஆம் ஆண்டில் நில சீர்திருத்தப் பணிகள், 6 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டதை பாராட்டி, அரசு துறைகள் மற்றும் சிறந்த திட்டங்களுக்கு வழங்கப்படும் ஸ்காச் வெள்ளி விருது வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் 10,000 பண்ணைக் குட்டைகள் 100 கோடி ரூபாய் செலவில் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் 2018-19-ம் ஆண்டு முதல் இதுவரை 5,800 பண்ணைக்குட்டைகள் 100 சதவிகிதம் மானியத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையால் அமைக்கப்பட்டதை பாராட்டி, அரசு துறைகள் மற்றும் சிறந்த திட்டங்களுக்கு வழங்கப்படும் ஸ்காச் வெள்ளி விருது வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் 3,000 எண்ணிக்கையிலான பண்ணைக் குட்டைகள் 30 கோடி ரூபாய் செலவில் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் 2018-19 முதல் இதுவரை 1,526 பண்ணைக் குட்டைகள் 100 சதவிகிதம் மானியத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண்மைப் பொறியியல் துறையால் அமைக்கப்பட்டு, பண்ணைக்குட்டைகள் திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு ஸ்காச் வெள்ளி விருது வழங்கப்பட்டது.

நுண்ணீர் பாசனம் அமைக்க சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கி 5.58 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிற்கு நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டு, 5.53 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் விதமாக நுண்ணீர் பாசன திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைக்கு ஸ்காச் வெள்ளி விருது வழங்கப்பட்டது. இந்நான்கு ஸ்காச் வெள்ளி விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம்வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு காண்பித்து வாழ்த்து பெற்றார்.