சிறப்பு செய்திகள்

மக்கள் வைத்த கோரிக்கைகளை 85 சதவிகிதத்திற்கு மேல் நிறைவேற்றியுள்ளோம். முதல்வர் பெருமிதம்.

மக்கள் வைத்த கோரிக்கைகளை 85 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றியுள்ளோம் என்று முதல்வர் பெருமிதத்துடன் பேசினார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர்  பேசியதாவது

கவுண்டம்பட்டி பகுதியில் வாழ்கின்ற மக்கள் தேர்தல் நேரத்தில், கவுண்டம்பட்டி-வெல்லாண்டிவலசை இணைக்கின்ற பாலம், கட்டிக் கொடுக்க வேண்டுமென்று வைத்த கோரிக்கையை ஏற்று, சரபங்கா நதியின் குறுக்கே ஒரு பாலம் கட்டி புரட்சித் தலைவி அம்மா காலத்திலே திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட்டது.

இப்பொழுது, மேலும் ஒரு புதிய பாலம் தேவை என்ற நைனாம்பட்டியில் இருக்கின்ற பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கிட்டத்தட்டரூபாய் 1.90 கோடி மதிப்பீட்டில் சரபங்கா நதியின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பாலத்தை திறந்து வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்தப் பாலத்தை கட்டியதன் மூலம், நைனாம்பட்டியில் இருக்கக்கூடிய, அரசு மருத்துவமனைக்கு செல்லக்கூடிய பொது மக்கள், பள்ளிக்குச் செல்கின்ற நம்முடைய மாணவச் செல்வங்கள் கிட்டத்தட்ட 1.50 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லக்கூடிய நிலையை மாற்றி, இப்பொழுது நேரடியாக, எளிதாக செல்லக்கூடிய ஒரு சூழ்நிலையை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக அம்மாவின் அரசு தடையில்லாமல் 30 வார்டுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட காவிரித் தண்ணீரை கொடுக்கின்றது. நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம் சீரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்திலே புதிதாக திருமண மண்டபங்கள் கட்டப்பட்டு வருகிறது. எடப்பாடி நகராட்சிக்கு அருகிலே பிரம்மாண்டமான மார்கெட் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, மாலை நேரங்களில் ஓய்வு எடுப்பதற்காக பூங்கா வசதி அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இங்குள்ள மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்காக குறைந்த கட்டணத்திலே, ஏற்கனவே, புரட்சித்தலைவி அம்மா இருக்கின்றபொழுதே வைத்த கோரிக்கையை ஏற்று அனைத்து பட்டப்படிப்புப் பிரிவுகளையும் உள்ளடக்கிய, இரண்டாயிரம் மாணவர்கள் படிக்கக்கூடிய அளவிற்கு பிரம்மாண்டமான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நாங்கள் கொடுத்திருக்கின்றோம். அதேபோல, ஜலகண்டபுரத்திற்கும், நங்கவள்ளிக்கும் இடையிலே வனவாசி என்ற பகுதியிலே சுமார் ரூபாய் 58 கோடி மதிப்பீட்டில் பாலிடெக்னிக் கல்லூரி பிரம்மாண்டமாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. எட்டிக்கோட்டைமேட்டில் பி.டெக் கல்லூரியும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சிட்கோ தொழிற்பேட்டை விரைவில் அமைக்கவிருக்கின்றோம். மருத்துவமனைகள் எல்லாம் சீரமைக்கப்படுகின்றது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதிகளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவமனைகளை திறந்திருக் கின்றோம். புதிதாக ரேஷன் கடைகளை திறந்திருக்கின்றோம், அதற்கான கட்டடங்களை கொடுத்திருக்கின்றோம். பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பால் உற்பத்தியாளர்களுக்கு புதிதாக கட்டடங்களை கட்டிக் கொடுத்திருக்கின்றோம்.

வெள்ளாளபுரம் பஞ்சாயத்து, செட்டிமாகுறிச்சி பஞ்சாயத்து, நங்கவள்ளி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் மாதிரிப் பள்ளி வகுப்புகளையும் அதற்கான கட்டடங்களையும் அம்மாவினுடைய அரசால் திறந்து வைத்து, மாணவர் நலன் காக்கப்படுகிறது என்பதையும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

நங்கவள்ளியில் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளவும், மார்கெட் கமிட்டி மூலமாக விவசாயிகள் வங்கிக் கடன் பெறுவதற்காகவும் வேளாண் துறைக்கு ரூபாய் 1.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக வேளாண் கட்டடம் கட்டிக் கொடுத்திருக்கின்றோம். இதுபோல பல்வேறு வசதிகளை, எடப்பாடி மக்கள் வைத்த கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றித் தந்திருக்கின்றோம். மேலும், மக்களின் புதிய கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசு தயாராக இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஜலகண்டபுரம் பேரூராட்சியில் இருக்கின்ற மக்கள் வைத்த கோரிக்கையான போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு ஒரு புறவழிச் சாலை அமைப்பதற்கு அரசு பரிசீலிக்கும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே எடப்பாடி நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பிரம்மாண்டமான புறவழிச் சாலையை அமைத்திருக்கின்றோம். இங்கே வந்திருக்கக்கூடிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலமாக மின்சாரக் கோட்டம் கொடுத்திருக்கின்றோம், நெடுஞ்சாலைத் துறைக்கு கோட்ட அலுவலகம் கட்டிக் கொடுத்திருக்கின்றோம், கல்வி மாவட்டத்தை இங்கே கொடுத்திருக்கின்றோம். அதுபோல, வசநயளரசல-யை இன்றைக்கு கட்டிக் கொடுத்திருக்கின்றோம். இப்படி பல திட்டங்களை, மக்கள் வைத்த கோரிக்கைகளை, கிட்டத்தட்ட 85 சதவிகிதத்திற்கு மேல் நாங்கள் நிறைவேற்றித் தந்திருக்கின்றோம். இன்னும் சில நகரப் பகுதியிலே சாலைகள் அமைக்க வேண்டுமென்று வைக்கப்பட்ட கோரிக்கைகளும் படிப்படியாக அமைத்துக் கொடுக்கப்படும் என்ற செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, எடப்பாடியில் ரூபாய் 80.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சார்நிலைக் கருவூல அலுவலகக் கட்டடம், தாட்கோ மூலம் சமுத்திரம் ஊராட்சியில் ரூபாய் 1 கோடியே 14 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கொங்கணாபுரம் பேரூராட்சியில் ரூபாய் 1.00 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு வாரச் சந்தை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 68 இலட்சத்து 6 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நிழற்கூடம்,

புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் மற்றும் கான்கிரீட் சாலைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 34 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4 அங்கன்வாடி கட்டடங்கள் என மொத்தம் ரூபாய் 5 கோடியே 87 இலட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற 17 புதிய பணிகளை இன்றையதினம் உங்கள் முன் திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

அதுமட்டுமல்லாமல், எடப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமான திட்டங்கள்  அம்மா  இருக்கின்ற காலத்திலே தொடங்கப்பட்டு, முடிக்கப்பட்டு அந்தப் பகுதி மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை கொடுக்கின்றோம். மேலும், விடுபட்டுள்ளதாகச் சொன்ன சில பகுதிகளும் இப்பொழுது சேர்க்கப்பட்டு விரைவாக அந்தப் பணிகளையும் தொடங்கவிருக்கின்றோம்.

இந்த ஊராட்சி ஒன்றிய மக்களால், குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி தேவை என்று சட்டமன்ற உறுப்பினர்களிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, ஆய்வு செய்து, அந்தப் பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என்ற செய்தியை இந்த நேரத்திலே குறிப்பிட விரும்புகின்றேன்.

ரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக இருந்த காலகட்டத்திலே, நங்கவள்ளி-மேச்சேரி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரவேண்டுமென்று பொதுமக்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையிலே, விரைவாக அந்தப் பணியை முடித்து இன்றைக்கு பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ள அரசு அம்மாவினுடைய அரசு என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

அதேபோல, இந்த கவுண்டம்பட்டிப் பகுதியிலே குடிநீர், சாலை, கழிவுநீர் அகற்றுதல், மக்களுக்குத் தேவையான சுகாதார வசதி, கால்நடை மருத்துவமனை, ரேஷன் கடைகளுக்கு நல்ல கட்டடம் மற்றும் புதிய கடைகள் திறப்பு, விவசாயப் பெருங்குடி மக்களுக்குத் தேவையான வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை நம்முடைய எடப்பாடி பகுதி வாழ் மக்கள் அனைவருக்கும் அம்மாவினுடைய அரசு சிறந்த முறையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி, மேலும் உங்களால் கொடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்ற செய்தியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.திருச்செங்கோட்டிலிருந்து ஓமலூர் வரை 4 வழிச் சாலையாக மாற்றுவதற்கு அம்மாவினுடைய அரசால் திட்டம் தீட்டப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது என்பதையும் இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

மக்கள் வைத்த கோரிக்கைகள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று நான் எண்ணுகிறேன் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, இந்த முடிவுற்ற 17 பணிகளையும் உங்கள் முன் திறந்து வைத்துள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

இவ்வாறு பேசினார்.