சிறப்பு செய்திகள்

கணிப்பு அல்ல கருத்து திணிப்பு – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி…

சேலம்:-

கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2016-ல் ஊடகங்கள் கருத்துக் கணிப்பை சொன்னார்கள். சேலம் மாவட்டத்தில் 3 இடங்களில் மட்டும் அஇஅதிமுக வெற்றிபெறும் என்றும், நான் தோல்வி அடைவேன் என்றும் பத்திரிகையிலும், ஊடகத்திலும் செய்தி போட்டீர்கள். ஆனால் சேலம் மாவட்டத்தில் 42 ஆயிரம் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன். சேலம் மாவட்டத்தில் நீங்கள் குறிப்பிட்ட 3 இடங்களுக்கு பதிலாக 10 இடங்களில் நாங்கள் வெற்றிபெற்றோம். இதுதான் கருத்துக்கணிப்பின் நிலவரம். இது கருத்துக்கணிப்பு அல்ல.கருத்து திணிப்பு. 23-ந் தேதி ஊடகங்கள் சொல்வது சரியா அல்லது நாங்கள் சொல்வது சரியா என்று நீங்களே சொல்லுங்கள்.

நான் தமிழகத்தை பற்றி மட்டும்தான் நான் பேசுகிறேன். மற்ற மாநிலத்தை பற்றி எனக்குத் தெரியாது. தமிழகத்தின் நிலவரம்தான் எனக்கு தெரியுமே தவிர மற்றவை எதுவும் தெரியாது. நாங்கள் தேசிய கட்சி இல்லை. இது மாநில கட்சி. தமிழகத்தை பொறுத்தவரை அஇஅதிமுகவும், கூட்டணி கட்சிகளும் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவோம். தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் கழகமும், கூட்டணி கட்சிகளும் வெற்றிபெறும்.

இதுபோல சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 இடங்களிலும் கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். தமிழகத்தை பொறுத்தவரையில் ஏற்கனவே 2016-ல் இதேபோல கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டது. அந்த கருத்துக்கணிப்பு பொய் என்று நிரூபணம் ஆனது. அதேபோல இப்போது வந்துள்ள கருத்துக் கணிப்பும் பொய்யாகும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

இதனைத்தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு முதலமைச்சர் தமிழகத்தை பொறுத்தவரை விவசாயிகள் பாதிக்கக்கூடிய எந்த திட்டத்தையும் கழக அரசு அனுமதிக்காது என்றார். உடனே செய்தியாளர்கள் இது எட்டுவழிச்சாலை திட்டத்துக்கும் பொருந்துமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிளித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது:-

இது எப்படி பாதிப்பு என்று சொல்ல முடியும். சாலை இல்லாமல் எப்படி போக முடியும். சாலை இல்லாமல் எந்த இடத்திற்காகவாது போக முடியுமா? திமுக ஆட்சியில் 786 கிலோ மீட்டர் சாலைகளை போட்டார்கள். அப்போது எல்லாம் விவசாயிகள் பாதிக்கவில்லையா? நீங்களும், நாங்களும் செல்லும் சாலை எப்படி போட்டார்கள். அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு சாலைகள் அமைக்க வேண்டும். அப்போது தான் விபத்தை குறைக்க முடியும்.

குறைந்த நேரத்தில் பயணம் செய்ய முடியும். அதுமட்டுமல்ல தொழில் வளம் பெறவேண்டும் என்றால் சாலை மிக முக்கியம். 2001-ல் இருந்த வாகனத்திற்கும், தற்போது இருக்கும் வாகனத்திற்கும் 300 மடங்கு அதிகரித்துள்ளது. உதாரணத்திற்கு அப்போது ஒரு லட்சம் வாகனம் என்றால் இப்போது அதே சாலையில் 4 லட்சம் வாகனம் செல்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துக்கள் ஏற்படுகிறது. உங்களுக்கே தெரியும். தருமபுரியிலிருந்து சேலம் வரை எவ்வளவு விபத்துகள் ஏற்படுகிறது. அதிக அளவில் உயிர்ச் சேதம் ஏற்படுகிறது. உயிர் முக்கியம். மக்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும். ஊடகங்களும் இது குறித்து தெளிவாக போடவேண்டும்.

இந்த பணியை இப்போது ஆரம்பித்தால் இன்னும் 6 வருடம் ஆகும். 6 ஆண்டு என்று வரும்போது இன்னும் கூடுதலாகும். அப்போது 6 லட்சம் வாகனமாக உயர்ந்துவிடும். போக்குவரத்து செல்ல முடியாத நிலை ஏற்படும். வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டுத்தான் அதற்கு தக்க சாலை அமைக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறது. புதிய புதிய தொழிற்சாலை வரும்போது கனரக வாகனங்கள் அதிகமாக வருகிறது.

அதற்கு ஏற்றவாறு சாலைகளின் அமைப்பு இருக்க வேண்டும். இப்போது இருக்கும் சாலைகள் 15 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட சாலைகள். தற்போது இருக்கின்ற நிலைக்கு ஏற்றவாறு சாலைகள் அமைத்தால் தான் விபத்து இல்லாமல் பயணம் செய்ய முடியும். அதுபோல எரிபொருளை சிக்கனப்படுத்த முடியும். மக்களின் நன்மை கருதித்தான் சாலை அமைக்கப்படுகிறது. மக்களுக்குத்தான் நன்மை கிடைக்கிறது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.