சிறப்பு செய்திகள்

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் அவசர கடிதம்…

சென்னை:-

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை எக்காரணம் கொண்டும் அனுமதி அளிக்கக்கூடாது எனவும், கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்து திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்காக மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கோரியுள்ளது. இது குறித்த தகவல் கிடைத்ததும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பிரதமருக்கு உடனடியாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

மேகதாதுவில் குடிதண்ணீர் பிரச்சினையை காரணம் காட்டி அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கோரியுள்ளது. இந்த கோரிக்கை 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முற்றிலும் விரோதமானது. இது உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை மீறும் செயலாகும். எனவே மத்திய சுற்றுச்சூழல் துறை கர்நாடக அரசின் இந்த கோரிக்கையை உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

மேகதாதுவில் கர்நாடக அரசு எக்காரணம் கொண்டும் அணை கட்டக்கூடாது என்று ஏற்கனவே விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுத்துள்ளது. தங்களை நேரில் சந்தித்தபோதும் இது குறித்த மனுவை கொடுத்திருக்கிறேன். கர்நாடக அரசின் இந்த முயற்சி காவேரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு முற்றிலும் விரோதமான செயலாகும். காவேரி மேலாண்மை வாரிய வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை ஏற்கனவே கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

எந்த ஒரு அணை கட்டுவதாக இருந்தாலும் காவேரி நதி பாயும் கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முன் அனுமதி பெற வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதையும் மீறி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்காக மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு குடிதண்ணீர் பிரச்சினை என்ற பெயரில் அனுமதி கோரியிருக்கிறது. கர்நாடக அரசின் இந்த முயற்சி இரு மாநில அரசுகளின் உறவை பாதிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

எனவே குடிதண்ணீர் பிரச்சினையை காரணம் காட்டி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரியிருக்கும் முயற்சிக்கு மத்திய சுற்றுச்சூழல்துறை எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கக்கூடாது என்று தாங்கள் தலையிட்டு அத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த பிரச்சினையில் தாங்கள் ஜலசந்தி துறை அமைச்சகத்துக்கு உடனடியாக உத்தரவு பிறப்பித்து கர்நாடக அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கக்கூடாது என்று உத்தரவிடுமாறு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.