சிறப்பு செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு ரூ.5.18 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதிகள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்…

சென்னை:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 13.6.2019 அன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் புதுக்கோட்டை, விழுப்புரம், தஞ்சாவூர், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 5 கோடியே 18 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான 5 விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார்.

இதுகுறித்து அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியர் இடைநிற்றல் இன்றி கல்வி கற்றிடவும், அவர்தம் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும், நல்வாழ்விற்கும், புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டுதல், விடுதிக் கட்டடங்கள் கட்டுதல், கல்வி உதவித் தொகைகள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம், அத்தாணியில் 93 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மாணவர் விடுதி, விழுப்புரம் மாவட்டம், ஆயந்தூரில் 94 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மாணவர் விடுதி, தஞ்சாவூர் மாவட்டம், பூண்டியில் 1 கோடியே 44 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதி,

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 1 கோடியே 4 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலப்பள்ளி மாணவர் விடுதி மற்றும் திருப்பூர் மாவட்டம், திருப்பூரில் 81 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சீர்மரபினர் நலப்பள்ளி மாணவர் விடுதி, என மொத்தம் 5 கோடியே 18 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான 5 விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சீ.வளர்மதி, தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைச் செயலாளர் ஆ.கார்த்திக், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர் வா.சம்பத், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் மா.மதிவாணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.