சிறப்பு செய்திகள்

கோவை கிணத்துக்கடவில் புதிய சார் கருவூல அலுவலகம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்…

சென்னை:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், நிதித்துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவில் 60 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

இதுகுறித்து அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

நிர்வாக வசதிக்காகவும், அரசுக்கு ஏற்படும் தொடர் வாடகை செலவினத்தைத் தவிர்க்கவும், தற்போது மின் ஆளுமை திட்டங்களான தானியங்கி பட்டியல் ஏற்புமுறை மற்றும் மின் ஓய்வூதியம் போன்ற திட்டங்களை செம்மையாக செயல்படுத்திடவும், விலைமதிப்புமிக்க முத்திரைத்தாள்கள் மற்றும் சேம பாதுகாப்பு பொருட்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், ஓய்வூதியதாரர்களுக்கான வசதிகள் செய்து கொடுக்கவும், மாற்றுத்திறனாளிகளுக்கான தனி சாய்தளம் அமைக்கவும், வாடகை கட்டடங்களில் இயங்கும் சார்கருவூலங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும் என்று புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 8 ஆண்டுகளில் 60 சார் கருவூல அலுவலகக் கட்டடங்கள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவில் 60 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். இப்புதிய சார் கருவூலத்தில், கிணத்துக்கடவு வட்டம் தொடர்புடைய பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் பட்டியல்கள் ஏற்பளிக்கவும், ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான வசதிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் சேமபாதுகாப்பு பொருட்களை பாதுகாக்கும் காப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம், கருவூல கணக்குத்துறையின் முதன்மைச் செயலாளர் / ஆணையர் தென்காசி சு.ஜவஹர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.