சிறப்பு செய்திகள்

சிறுபான்மை மக்களை காக்கும் கரங்களாக கழக அரசு திகழும் – இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் துணை முதல்வர் உறுதி…

சென்னை:-

சிறுபான்மை மக்களை காக்கும் கரங்களாக கழக அரசு திகழும் என்று சென்னையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நேற்று மாலை 5.30 மணியளவில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஹாஜி ஹ. கரீம்கனி கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். தொழிலாளர் நலத் துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமை உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமான எல்லாம் வல்ல இறைவனாம் அல்லா, தனக்கே உரித்தான நற்செயல் என்று எடுத்துரைக்கின்ற ‘நோன்பு’ வைக்கும் திருப்பணியை முடித்து, நோன்பு திறக்கும் இந்த இனிய இப்தார் நிகழ்ச்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மிகச் சிறப்புடன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இஸ்லாமியப் பெருமக்கள் வாழும் இடங்களில் எல்லாம் இப்தார் விருந்து நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் நம்முடைய கழகத்தின் சார்பாக நடைபெறும் இந்த இப்தார் நிகழ்ச்சி ஒரு சம்பிரதாய நிகழ்வு அல்ல, ஒரு சரித்திர நிகழ்வு. நாம் நடத்துகின்ற இந்த இப்தார் விருந்துக்கென ஒரு பெரும் பாரம்பரியம் இருக்கிறது. நீண்ட வரலாறு இருக்கிறது.

இப்தார் விருந்தின் தத்துவத்தைப் புரிந்து, அதன்படி, அந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த ஒரே தலைவர் நம்முடைய இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்தான். இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களே, தனிப்பட்ட முறையில், தானே முன்னின்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தினார். அம்மா அவர்கள், உலகின் எந்த ஒரு அரசியல் இயக்கமும் செய்யாத வகையில், தனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் இப்தார் விருந்து நடத்த உத்தரவிட்டு, தான் மறையும் வரை, காண்போர் வியக்கும் வண்ணம், தொடர்ந்து நடத்தி வந்தார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய அந்த அன்பு வழியில்தான், அந்த அறநெறியில்தான், இன்றைக்கு நாம் இப்தார் விருந்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறோம்.இஸ்லாமிய பெருமக்களுக்கு மிகவும் பெருமைக்குரிய மாதம் ரமலான் மாதம். மிகவும் புனிதமான மாதம் ரமலான் மாதம்.

புனித ரமலான் மாதத்தில்தான் இஸ்லாமியர்கள் உயிராக நேசிக்கும் திருமறையாம் திருகுர்ஆன், நபிகள் நாயகம் ஸல் அல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாயிலாக, எல்லாம் வல்ல இறைவனால் இந்த உலகிற்கு அருளப்பட்டது. சிறப்பு மிக்க இந்த ரமலான் மாதத்தில் 30 நாட்கள் கடும் விரதமிருந்து, பசியின் கொடுமையை உணர்ந்து, ஏழை, எளியோரின் பசித் துன்பத்தைப் போக்க வேண்டும் என்ற உணர்வை எல்லோருக்கும் ஏற்படுத்துகின்ற சிறப்பை எல்லாம் வல்ல இறைவன் வழங்கியிருக்கிறான்.

அம்மா அவர்களும் அதைத்தான் செய்தார். பசி என்ற சொல்லே தமிழ்நாட்டில் மக்களிடம் இருக்கக் கூடாது என்று செயல்பட்டார். பசியில்லாத தமிழ்நாட்டை உருவாக்கி சாதனை படைத்தார். கலங்கி நின்ற ஏழைக் குடும்பங்களின் கண்ணீரைத் துடைத்தார். ஒவ்வொரு அரிசியிலும், அது யாருக்கு சேரவேண்டுமோ அவர்களது பெயரை அல்லா எழுதியிருப்பான் என்று இஸ்லாம் சொல்கிறது.

தமிழ்நாட்டிலுள்ள இரண்டு கோடி குடும்பங்களுக்கு வழங்கப்படும் 20 கிலோ விலையில்லா அரிசியிலும், அது யாருக்கு சேர வேண்டும் என்பதை குடும்ப அட்டைகளில் எழுதி வைத்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், ஒருவர், தான் ஈட்டுகின்ற லாபத்திற்கு ஏற்ப, ஏழை மக்களுக்கு உதவிகள் செய்திட வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.

சுருக்கமாகச் சொன்னால் ஏழை எளியவர்களுக்கு கொடுக்க வேண்டும், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று சொன்னது இஸ்லாம். புரட்சித்தலைவி அம்மா அவர்களும் அதைத்தான் சொன்னார், அதைத்தான் செய்தார், அம்மா அவர்கள் இருந்தவரை கொடுத்துக் கொண்டே இருந்தார், இன்று அம்மா அவர்களின் ஆட்சியும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

அள்ளி அள்ளிக் கொடுத்த புரட்சித்தலைவர் உருவாக்கிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,
பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவரின் வழியிலே புரட்சித் தலைவி அம்மா அவர்களும் அள்ளிக் கொடுத்தார், அப்படிக் கொடுக்க வேண்டும் என்பதை விசுவாசத் தொண்டர்களுக்கும் சொல்லிக் கொடுத்தார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு செய்ததைப் போல, வேறு எந்த ஒரு முதலமைச்சரும் இதுவரை நன்மைகள் செய்ததும் இல்லை. திட்டங்களைத் தந்ததும் இல்லை. அம்மா அவர்கள் சொல்லிக் கொடுத்தபடி, அம்மா அவர்களின் விசுவாசத் தொண்டர்களால் இந்த இஃப்தார் விருந்து இன்று சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் வேறு எந்த மாநில முதலமைச்சரும் நிறைவேற்றாத நலத் திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்கி மகிழ்ந்தவர் அம்மா. இஸ்லாமிய பெருமக்களை இதயத்திலே வைத்து, இஸ்லாமிய சமுதாயம் மேம்பட எண்ணில்லா சிறப்புத் திட்டங்களை உருவாக்கினார், அம்மா அவர்கள்.

ஹஜ் புனித யாத்திரைக்கு மானியம், உலமாக்கள் ஓய்வூதிய உயர்வு, பள்ளிவாசல்களுக்கு நோன்புக் கஞ்சிக்கான அரிசி, நாகூர் தர்கா சந்தனக் கூடு விழாவுக்கு ஆண்டுதோறும் இலவச சந்தனக் கட்டைகள், முஸ்லிம் இளைஞர்கள் சுயதொழில் தொடங்க நிதி உதவி , இஸ்லாமிய சகோதரிகள் வாழ்வில் முன்னேற மாவட்டந்தோறும் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள், அதன் செயல்பாட்டிற்கு இணை மானியம் என எண்ணற்ற திட்டங்களை அம்மா அவர்கள் உருவாக்கி, செயல்படுத்தினார்.

இஸ்லாமிய சமூகம் மேம்பாடு காண ஏராளமான நன்மைகளைச் செய்த அம்மா அவர்களின் வழியில், அம்மா அவர்கள் விட்டுச் சென்ற பணிகளைத்தான், அம்மா அவர்களின் விசுவாசத் தொண்டர்களாகிய நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
இஸ்லாமியர்களை நேசிப்பதில் அம்மா அவர்களின் ஆட்சிக்கு நிகரே இல்லை, பொய்யைக் கூட உண்மை என்ற நம்பி விடுகின்ற வேதனையான விஷயம் சில நேரங்களில் நடந்து விடுகிறது.

பாலைவனத்தில் கடும்வெயிலில், தாகத்தோடு நடப்பவர்களுக்கு தூரத்தில் தண்ணீர் இருப்பது போல தெரியும். அங்கே போனால் தண்ணீர் கிடைக்கும் தாகம் தீரும் என்று நம்பி, போவார்கள். ஆனால் அங்கே சென்ற பிறகுதான் தெரியும், அங்கே நீர் இல்லை, அவர்கள் கண்ணுக்குத் தெரிந்தது, வெறும் கானல் நீர் என்று. என்றுமே தாகம் தீர்க்கும் தண்ணீர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்று தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதை, ஒன்பது சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுகள் நிரூபித்திருக்கின்றன.

தமிழ்நாட்டில் என்றுமே அம்மா அவர்களின் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் திண்ணமான எண்ணம். இதனை ஏற்று, அனைத்து சிறுபான்மையின மக்களும், இஸ்லாமிய சமுதாய மக்களும் கழகத்திற்கு தங்களது ஆதரவை தந்தார்கள் என்பதைத்தான் ஒன்பது சட்டமன்ற இடைத்தேர்தல்களில் நமக்கு கிடைத்த வெற்றி எடுத்துச் சொல்கிறது.

இன்று விஞ்ஞான யுகம். வாட்ஸ்அப், ட்விட்டர், பேஸ்புக், என சமூக வலைதளங்களில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் கருத்துக்களை தடையின்றி எடுத்துக் கூறி வருகின்றனர். அப்படி எல்லா வலைதளங்களிலுமே தேர்தல் முடிவுகளைப் பற்றி ஒரு வாசகம் உலா வந்தது. “நல்லவர்களை இறைவன் சோதிப்பான். ஆனால் கைவிட மாட்டான்” நம்மை இறைவனும் கைவிடவில்லை.

இஸ்லாமியப் பெருமக்களும் கைவிட மாட்டார்கள், இன்னொரு வாசகமும், வலைதளங்களில் ட்ரண்ட், ஆனது, “கெட்டவர்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான், ஆனால் கை விட்டு விடுவான்” இப்படித்தான் சிலருக்கு தேர்தலில் நிறைய கொடுத்ததுபோல ஒரு காட்சியை இறைவன் கொடுத்திருக்கிறான், அது கைவிட்டுப்போய்விடும் என்ற தவிப்பில், சிரிக்கக் கூட முடியாமல் அவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டை ஆளலாம் என்று சிலர் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆசைக்கனவு ஒருபோதும் நிறைவேறாது, ஏமாற்றுகிறவர்கள் எப்பொழுதும் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். அது அவர்களுடைய இயல்பு, ஆனால், ஏமாறுகிறவர்கள் எப்பொழுதுமே ஏமாந்து கொண்டிருக்க மாட்டார்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்களுக்குப் பிறகு இஸ்லாமியர்களை மிகவும் நேசித்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பிறகு இஸ்லாமியர்களை தனது சகோதரர்களாக, சகோதரிகளாக நேசித்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், அம்மா அவர்களின் புனிதப் பாதையில் அம்மாவின் விசுவாசத் தொண்டர்களாகிய நாங்களும், இஸ்லாமியர்களை நேசித்துக் கொண்டிருக்கிறோம். சிறுபான்மை மக்களை நேசித்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்ற உணர்வோடு நேசித்துக் கொண்டிருக்கிறோம், இஸ்லாமியர்களுக்கு என்றுமே பாதுகாப்பு அரணாக இருப்பது, அம்மா அவர்களின் ஆட்சிதான், இஸ்லாமியர்களுக்கும், எங்களுக்கும் உள்ள உறவு வெறும் தேர்தல் காலத்து உறவு அல்ல,

“உடுக்கை இழந்தவன் கைபோல – ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு”

என்று திருவள்ளுவர் சொன்னது போல, சிறுபான்மையின மக்களுக்கு ஒரு துன்பமென்றால், தடுக்கின்ற கரங்களாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் இருக்கும். சிறுபான்மை மக்களுக்கு ஒரு ஆபத்தென்றால் அவர்களைக் காக்கின்ற கரங்களாக அம்மா அவர்களின் ஆட்சி இருக்கும். பாதிக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் எங்களைத் தேடி வருவதற்கு முன்பாகவே, அவர்களைத் தேடி நாங்கள் செல்வோம். பாதுகாப்பு தருவோம்.

அம்மா அவர்களின் வழியில் சிறுபான்மையின மக்களின் தோழர்களாய் உங்களுடனே இருப்போம். உங்களுக்குத் தோள் கொடுப்போம். உங்களில் ஒருவராகவே வாழ்வோம் .அதை எடுத்துச் சொல்லுகின்ற இனிய விழாவாக கழகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற இந்த இனிய இப்தார் விருந்து அமைந்திருக்கிறது என்பதைக் கூறி,இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.