தற்போதைய செய்திகள்

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் : கழக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

சென்னை

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் கழக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த ஏப்ரல் மாதம் தமிழகத்தின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி இடங்கள் காலியாகின்றன. அந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தன. இதன்படி வேட்புமனு கடந்த 6-ந் தேதி தொடங்கியது. 13-ந் தேதி பிற்பகல் 3 மணிவரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. சுயேட்சை வேட்பாளர்களாக கு.பத்மராஜன், அக்னி ஸ்ரீராமச்சந்திரன், இளங்கோ யாதவ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கழகத்தின் சார்பில் கடந்த 12-ந்தேதியன்று வேட்பாளர்கள் தம்பிதுரை, கே.பி.முனுசாமி மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.தி.மு.க. வேட்பாளர்கள் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் 9-ந்தேதியன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலுக்கான 13-ந்தேதி மாலை 3 மணி நிலவரப்படி மொத்தம் 9 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

இந்த நிலையில், சட்டசபை செயலாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசன் முன்னிலையில் வேட்புமனு பரிசீலனை கடந்த 16-ந் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ, தம்பிதுரை, கே.பி.முனுசாமி மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோரின் வேட்புமனுக்கள் செல்லத்தக்கவை என்று அறிவிக்கப்படுவதாகவும், சுயேட்சை வேட்பாளர்களான அக்னி ஸ்ரீராமச்சந்திரன், இளங்கோ யாதவ், பத்மராஜன் ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன என்றும் கி.சீனிவாசன் அறிவித்தார்.

18-ந்தேதி வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். இதற்காக  மாலை 3 மணிவரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 6 பேரில் யாரும் வேட்புமனுவை திரும்பப் பெறவில்லை.

இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேரவை செயலாளர் கி.சீனிவாசன் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த 6 உறுப்பினர்களின் பதவிக் காலம் அடுத்த மாதம் ஏப்ரல் 2-ந்தேதியோடு முடிகிறது. அதனால் 6 காலியிடங்கள் ஏற்பட்டு, எம்.எல்.ஏ.க்களை வாக்காளர்களாகக் கொண்டு அந்த காலியிடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்தத் தேர்தலுக்கு தாக்கல் செய்யப்பட்டு, செல்லத்தக்கதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களின் எண்ணிக்கை 6-ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையும் காலியிடங்களின் எண்ணிக்கையும் சமமாக உள்ளது.

அந்த வகையில் தி.மு.க. வேட்பாளர்கள் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மு.தம்பிதுரை, கே.பி.முனுசாமி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜி.கே.வாசன் ஆகியோர் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது தேர்தல் பார்வையாளரும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியுமான சத்யபிரத சாகு உடனிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கழக வேட்பாளர்கள் மு.தம்பிதுரை, கே.பி.முனுசாமி மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோர் பேரவை செயலாளர் சீனிவாசனிடம், எம்.பி.யாக தேர்வு பெற்றதற்கான சான்றிதழை பெற்றனர். 3 எம்.பி.க்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பொன்னடை போர்த்தியும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர். இங்கு பெற்ற இந்த சான்றிதழ்களை டெல்லிக்கு கொண்டு சென்று அங்கு 6 பேரும் எம்.பி.யாக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்வார்கள்.