ஓமந்தூரார் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் மூலம் ஓராண்டில் 10,000 பேர் பயன் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்…

சென்னை:-
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் உள்ள அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தின் முதலாம் ஆண்டு விழாவில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அம்மா முழு உடல் பரிசோதானை மையத்தின் ஓராண்டு கண்காட்சியினை பார்வையிட்டு, பயனாளிகளை கவுரவித்து, பிளாட்டினம் பிளஸ் பரிசோதனை தொகுப்பினை அறிமுகப்படுத்தி, மையத்தில் பணிபுரிபவர்களை பாராட்டி, ஓராண்டு சாதனை கேக் வெட்டி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது :-
பொது மக்கள் குறைந்த கட்டணத்தில் முழு உடல் பரிசோதனைகளை ஒரே இடத்தில் பெற வேண்டும் என்பதற்காக புரட்சித்தலைவி அம்மா அவர்களால் ரூ.10 கோடி மதிப்பில் 01.03.2016 அன்று சென்னை அரசு பொது மருத்துவமனையிலும், முதலமைச்சரால் ரூ.4 கோடி மதிப்பில் 08.06.2018 அன்று தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையிலும் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் தொடங்கி வைக்கப்பட்டது.
இங்கு மூன்று பிரிவுகளில் ரூபாய் 1000-க்கு அம்மா கோல்டு முழுஉடல் பரிசோதனை திட்டமும், ரூ.2000-க்கு அம்மா டைமண்டு முழுஉடல் பரிசோதனை திட்டமும், ரூபாய் 3000-க்கு அம்மா பிளாட்டினம் முழுஉடல் பரிசோதனை திட்டமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று ரூ.4000 மதிப்பில் நான்காவதாக அம்மா பிளாட்டினம் பிளஸ் பரிசோதனை தொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்தொகுப்பில் அம்மா பிளாட்டினம் + கண்பார்வை பரிசோதனை,/ கண் அழுத்த நோய் பரிசோதனை,/ கண்பார்வை குறைபாடு கண்டறியும் பரிசோதனை,/ விழித்திரை பரிசோதனை,/ நுரையீல் செயல்பாடு கண்டறிதல்,/ இதய செயல்பாடு கண்டறியும் டிரெட்மில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் தொடங்கப்பட்டு ஓராண்டில் இதுவரை 5199 ஆண்களும், 4647 பெண்களும் என மொத்தம் 9845 பேர் பயன்பெற்றுள்ளனர். இதன் மூலம் ரூ.2.48 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த பரிசோதனைகளை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டால் குறைந்தது ரூ.15,000-க்கும் மேல் செலவாகும்.
ஆனால் இம்மையத்தில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக அல்ல அதற்கும் மேலாக அதி நவீன மருத்துவக் கருவிகளைக் கொண்டு, பரிசோதிக்கப்பட்ட அன்றே முடிவுகள் அளிக்கப்பட்டு மருத்துவர்களால் உரிய மேல்சிகிச்சைக்கு அறிவுறுத்தப் படுகிறார்கள். மேலும், பரிசோதனைக்கு வரும் பயனாளிகளுக்கு தரமான மற்றும் சுகாதாரமான உணவு எவ்வித கட்டணமும் இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் மரு.உமாநாத், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் மரு. செந்தில்ராஜ், மருத்துவக் கல்வி இயக்குநர் மரு.எட்வின் ஜோ, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை உள்ளுரை மருத்துவர் மரு. உமா மகேஸ்வரி, தொடர்பு அலுவலர் மரு.ஆனந்தகுமார் மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளனர்.