தமிழகம்

தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை:-

தென் தமிழகத்தில் குமரி, நெல்லை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியிருப்பதாவது..

தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு இலங்கையை ஒட்டி நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்பொழுது வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவாரூரில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது.

அடுத்த  24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் அனேக இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும்.

தென் தமிழக மாவட்டங்களான குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா  மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கான அறிவுறுத்தல்: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவான காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியுள்ளதன்  காரணமாக, தெற்கு தமிழக கடலோரம், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, மாலத்தீவுகள், லட்சத்தீவுகள், தெற்கு கேரளம் ஆகிய பகுதிகளில் 23, 30, 31ம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளை பொருத்தவரையில் அடுத்த சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.