சிறப்பு செய்திகள்

இருமொழி கொள்கை தான் எங்கள் உயிர் மூச்சு – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி…

சென்னை:-

தமிழை வைத்து தி.மு.க. அரசியல் நடத்துகிறது என்றும், இரு மொழி கொள்கை தான் எங்கள் உயிர் மூச்சு என்றும் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னை ராயபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தை பொறுத்தவரை இருமொழி கொள்கை தான் இதுவரை பின்பற்றப்பட்டு வருகிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோர் ஆட்சியைத் தொடர்ந்து அவர்கள் வழிநின்று செயல்படும் இப்போதைய கழக அரசும் அதே கொள்கையைத் தான் பின்பற்றுகிறது. முதலமைச்சர் மும்மொழிக் கொள்கையை மறைமுகமாக ஆதரிப்பதாக சில எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே கற்பனையாக விமர்சனம் செய்துள்ளன. இப்படி சொல்வதன் மூலம் மக்களிடையே கழகத்திற்குள்ள செல்வாக்கை குறைத்து விடலாம் என்று கற்பனை செய்கிறார்கள்.

கழக அரசை பொறுத்தவரை இரு மொழி கொள்கை தான் உயிர்த்துடிப்பாக கொண்டு செயல்படுகிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. முதலமைச்சர் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தான் தனது கருத்தை வெளியிட்டார். அதில் மும்மொழி கொள்கை என்ற பேச்சுக்கே இடமில்லை. தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் தமிழ் மொழியையும், மொழிக் கொள்கையையும் வைத்து அரசியல் பிழைப்பு நடத்தப் பார்க்கிறார்கள். இந்தியை மற்றவர்கள் படிக்கக்கூடாது என்று சொல்லி விட்டு தி.மு.க. தலைவர்களின் குழந்தைகளை இந்தி படிக்க வைத்து அவர்களை வளப்படுத்தி வருகிறார்கள்.

ஏன் முன்பு முதலமைச்சராக இருந்த கருணாநிதி கூட தன் பேரன் தயாநிதி மாறனுக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்கும்போது தயாநிதி மாறனுக்கு இந்தி நன்றாக பேசத் தெரியும், எழுத தெரியும் என்று சொல்லித் தான் அமைச்சர் பதவி வாங்கினார். அவர்கள் சுய நலத்திற்காக மும்மொழி கொள்கையை எதிர்ப்பது போல் எதிர்த்து ஆனால் தங்கள் வீட்டு பிள்ளைகளை இந்தி போன்ற மற்ற மொழிகளை படிக்க வைத்து விடுகிறார்கள். ஆனால் அதே சமயத்தில் அம்மாவின் அரசு இரு மொழி கொள்கையைத் தான் தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.