தற்போதைய செய்திகள்

ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் எடுக்க தடைவிதித்து சென்னை மக்களுக்கு தி.மு.க. துரோகம் – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி…

சென்னை:-

ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் எடுத்து வர தடைவிதித்து சென்னை மக்களுக்கு தி.மு.க. துரோகம் செய்கிறது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார்கூறினார்.

சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தண்ணீர் தொடர்பாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, உள் நோக்கத்தோடு, தி.மு.க. போராட்டம் நடத்துவது நிச்சயமாக
மக்களிடம் எடுபடாது. ஸ்டாலின், துரைமுருகன் இருவரும் சென்னையில்தான் உள்ளார்கள். வருடத்திற்கு 365 நாட்களில் 300
நாட்கள் சென்னையில்தான் இருக்கிறார். 65 நாட்கள்தான் அவர்கள் ஊருக்கு போவார்கள். 300 நாட்கள் சென்னையின் குடிநீரை
குடித்துவிட்டு, ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் சென்னைக்கு வரக்கூடாது என்றால் இது மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். இவர்கள் போராட்டம் நடத்துவதற்கு தார்மீக உரிமை கிடையாது.

சென்னையில் 400-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. துணை முதலமைச்சர் குறிப்பிட்டது போல பஞ்சம் என்பது கிடையாது. பற்றாக்குறை இருக்கலாம். அந்த பற்றாக்குறையை திறம்பட அரசு சமாளிக்கிறது. வறட்சி மற்றும் வெள்ளம் மற்றும் எந்த இயற்கை இடர்பாடுகளையும் சமாளிக்கும் திறன் படைத்தது அம்மாவின் அரசு. எனவே அரசியல் காரணங்களுக்காக நடத்தும் போராட்டங்கள் மக்களிடம் எடுபடாது.

எந்த வகையிலும் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில்தான் தண்ணீர் எடுத்துக் கொண்டுவரப்படும் என்று முதல்வர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஜோலார்பேட்டை மக்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில்தான் இது செயல்படுத்தப்படும் என்று முதல்வர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.