தற்போதைய செய்திகள்

ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் – அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் துவக்கி வைத்தார்…

ராமநாதபுரம்:-

ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணியை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தில்லையேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பள்ளமோர்குளம் கிராமத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன்,வறட்சியான சூழ்நிலையால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளை துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் உடனிருந்தார்.

பின்னர் அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் நமது கழக அரசு தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் குடிநீர் வழங்கிட இயலாத குடியிருப்புகளுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்திட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது நாளொன்றிற்க்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் சராசரியாக 35 எம்.எல்.டி. அளவிலும், ஊரக வளர்ச்சி துறை மூலம் ஊரக குடிநீர் திட்டத்தின் கீழ் 6.5 எம்.எல்.டி. அளவிலும், உள்ளூர் குடிநீர் ஆதாரங்கள் மூலம் 40 எம்.எல்.டி. அளவிலும் பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின்படி மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்ய இயலாத கிராம பகுதிகளுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்திட ஏதுவாக ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், திருப்புல்லாணி, நயினார் கோயில், பரமக்குடி, கடலாடி, கமுதி மற்றும் முதுகுளத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 45 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு டேங்கர் லாரி மூலம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வீதம் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் கூறினார்.

இந்நிகழ்வின் போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அயினான், உதவி செயற்பொறியாளர்கள் சண்முகநாதன், ஜவஹர் கென்னடி, உதவி பொறியாளர்கள் முத்து கிருஷ்ணன், சுவடு பாலசுப்பிரமணியன்,திருப்புல்லாணி ஒன்றிய கழக செயலாளர் முனியாண்டி உட்பட அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள்,கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.