தற்போதைய செய்திகள்

பெண்ணாடத்தில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை – கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்…

கடலூர்:-

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூரில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

கடலூர் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வெ.அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். இதில் 20 நபர்களுக்கு தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வேலைவாய்ப்பிற்கான பணி நியமன ஆணைகளை வழங்கி வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அரசு இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திட பல்வேறு எண்ணற்ற திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு மறைந்த அம்மா தலைமையில் முதன்முதலாக 2015-ம் ஆண்டு சிறப்பாக நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் 304 நிறுவனங்கள் கலந்து கொண்டு ரூ.3431 கோடி முதலீடு ஈட்டப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழ்நாடு அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் பிற மாநிலங்களை காட்டிலும் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 120 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1442 பொறியியல் பட்டதாரிகள், 2690 அறிவியல் மற்றும் கலை பட்டதாரிகள், 282 கலை மற்றும் அறிவியல் முதுகலை பட்டதாரிகள், 1306 டிப்ளமோ படித்தவர்கள், 1111 ஐ.டி.ஐ படித்தவர்கள், 388 மருத்துவத்துறையில் நர்சிங் மற்றும் பார்மசி போன்ற துறைகளில் பயின்றவர்கள், 3475 பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு கல்வித்தகுதியுடைய 10694 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தால் நடத்தப்படும் பல்வேறு இலவச திறன் பயிற்சிகளுக்கான பதிவும் நடைபெறவுள்ளன. இந்த மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டுள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்கள் திறமைகளை முழுமையாக வெளிகொணர்ந்து வேலைவாய்ப்பை பெற்று தங்கள் பணியுரியும் நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றிட வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அமைந்துள்ளது போல காலணி தொழிற்சாலை கடலூர் மாவட்டத்தில் கேப்பர் மலைப்பகுதியில் அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெண்ணாடம் பகுதியில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கவும், கடலூர் சிப்காட் பகுதியில் இருந்து வெளியேறும் தண்ணீரை சுத்திகரித்து கடலில் விடுவதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்க வலியுறுத்துவேன். சிப்காட் தொழிற்சாலைகளுக்காக கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையத்தை செயல்படுத்த இருக்கின்றோம். இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் விரைவில் வெளியிடுவார்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் , மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 7 நபர்களுக்கு திருமண உதவித்தொகையாக 64 கிராம் தங்கமும், 1,50,000க்கான காசோலையையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.75,000 மதிப்புள்ள பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியையும் வழங்கினார்.