தற்போதைய செய்திகள்

கல்வியால் மட்டுமே சமுதாயத்தில் உயர்ந்த நிலைய அடைய முடியும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு…

மதுரை:-

கல்வியால் மட்டுமே சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான், உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் மடிகணினி வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 3619 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினிகளை வழங்கி பேசியதாவது:-

மடிகணினி ஒரு அறிவுப்பெட்டகம். போட்டி உலகத்தில் நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஏழை மாணவர்களும் கல்வியில் உயர்ந்த நிலையினை அடைய வேண்டும் என்பதற்காக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விலையில்லா மடிகணினிகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

இதுமட்டுமல்லாது மாணவ, மாணவிகளுக்காக 14 வகையான கல்வி உபகரணங்களும் வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் பள்ளிக்கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியானது அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது. 2019-20-ம் ஆண்டில் பள்ளி கல்வித்துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக ரூ.28,757.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கூறும் அறிவுரையினை ஏற்று, ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்டத்தாய் – என்பதற்கு ஏற்ப சமுதாயத்தில் உயர்ந்த நல்ல நிலையினை அடைவதற்கு கல்வி ஒன்றினால் தான் முடியும்.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற திருக்குறளுக்கேற்ப, யார் எது கூறினும், எதில் உண்மைத்தன்மை உள்ளது என்பது அறிந்து செயல்பட வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதில் தாய், தந்தையருக்கு அடுத்த நிலையில் ஆசிரியர்கள் தான் உள்ளனர். எனவே ஆசிரியர்கள் நமது அறிவுக்கண்ணை திறப்பவர்கள். தன்னுடைய மாணவர்கள் உயர்ந்த நிலைக்கு வந்ததை அறிந்து பெருமைப்படும் முதல் நபர் ஆசிரியர்கள் தான்.

தகுதியான, திறமையான அடித்தளம் அமைய பள்ளிப்பருவத்தை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தேவையானதை மட்டும் கற்றுக்கொள்ள வேண்டும். மடிகணினி மூலம் நல்லதை மட்டுமே தேடி கற்றுக்கொள்ள வேண்டும். விடாமுயற்சி, கடின உழைப்புடன் போராடும் போது நாம் அடைய வேண்டிய இலக்கினை அடையலாம்.

எத்தனை பட்டப்படிப்பு படித்திருந்தாலும், கணினி அறிவு இன்றைய காலக்கட்டத்தில் கட்டாயம் தெரிந்து வைத்திருத்தல் அவசியம் என்பதை மனதில் கொண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மகத்தான இத்திட்டத்தை மாணவர்களுக்காக துவக்கி வைத்துள்ளார்.

இத்தகைய திட்டத்தை அம்மா வழியில் செயல்படும் அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மேலும் தற்பொழுது நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக வறட்சி நிவாரண நிதியிலிருந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி குடிநீர் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.