தற்போதைய செய்திகள்

சொல்வதை செய்வோம், சொல்லாததையும் செய்வோம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி…

மதுரை

நாங்கள் சொல்வதை செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி சாத்தங்குடியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சாந்தகுமார் தலைமை தாங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அம்மா திட்ட முகாமை தொடங்கி வைத்து 160 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், தனலட்சுமி, கால்நடைத்துறை இயக்குநர் ராஜசேகர், வட்டாட்சியர்கள் தனலெட்சுமி, நாகேந்திரன், மாவட்ட கழக துணை செயலாளர் ஐயப்பன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, திருமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள் ராமசாமி, மகாலிங்கம், பேரூர் கழக செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்பிரமணி, முன்னாள் சேர்மன்கள் தமிழழகன், ஆண்டிச்சாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

மக்களைத் தேடி அரசு என்று அம்மாவால் உருவாக்கப்பட்டது தான் இந்த அம்மா திட்டம். தமிழகத்தில் உள்ள அனைத்து குக்கிராமங்களிலும் அவர்களின் இருப்பிடத்திற்கே அதிகாரிகள் அனைவரும் பங்கேற்று மக்களை சந்தித்து அவர்களின் மனுக்களை பெற்று உடனடி தீர்வு கண்டு அவர்களின் குறைகளை போக்குவது தான் அம்மா திட்டம், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் இத்திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அம்மாவின் கனவு திட்டமான இந்த திட்டத்தை முதலமைச்சரும், துணைமுதலமைச்சரும் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர் தற்போது 3 மாதங்களுக்கு முன்பு தேர்தல் விதிமுறை இருந்ததால் உங்களை சந்திக்க முடியவில்லை. அம்மாவின் அரசு தொடர வேண்டும் என்று எதிர்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களுக்கு செவி சாய்க்காமல் அம்மா ஆட்சி தொடர வேண்டும் என்று வாக்களித்த தமிழ்நாடு மக்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

அம்மா அரசை பாதுகாப்பு கொடுத்ததில் இன்னும் 4 அல்லது 5 சீட்டுகள் அதிகமாக கொடுத்திருந்தால் மக்கள் திட்டங்களை உங்களுக்கு கொடுப்பதற்கு எளிதாகவும், ஊக்கமளிப்பதற்கும், உற்சாகம் தருவதாகவும் இருந்திருக்கும் அம்மா அரசின் மக்கள் பணியை அங்கீகரிப்பதாக அமைந்திருக்கும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம், ஒழுங்கை சிறப்பாக பேணிக்காப்பதில் முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது. அது மட்டுமல்லாது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்தி அதன் மூலம் 11 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் அரசாக அம்மாவின் அரசு உள்ளது.

புரட்சித்தலைவி அம்மா கண்ட கனவை நிறைவேற்றும் வண்ணம் எதிர்க்கட்சிகள் போட்ட எத்தனையோ தடைகளை தாண்டி அதை உடைத்தெறிந்து முதலமைச்சர் தாய்நாட்டு மக்களுக்காக உழைத்து வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார். நீர் ஆதாரத்தை பெருக்கும் வண்ணம் குடிமராமத்து திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் ஏரி, கண்மாய்களில் உள்ள வண்டல் மண்ணை தங்களின் சொந்த நிலங்களுக்கு விவசாயிகள் எடுத்து சென்று அதன் மூலம் நிலத்திற்கு உயிரோட்டம் கொடுக்கும் வகையில் ஒரு அற்புதமான திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கினார்.

எய்ம்ஸ் மருத்துவமனை வருமா, வராதா என்று பல்வேறு கட்சியினர் கட்டுக்கதை விட்டனர். அதையெல்லாம் தகர்த்தெறிந்து பிரதமர் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர். கடந்த ஆட்சி காலங்களில் மத்திய அரசில் சக்தி வாய்ந்த மத்திய அமைச்சர்களாக இருந்து சாதிக்க முடியாததை ஒரு சாமானிய முதலமைச்சராக இருந்து சாதித்துள்ளார், பஸ்போர்ட் கரடிக்கல் பகுதியில் வர உள்ளது. இதற்காக மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அது மட்டுமல்லாது குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வண்ணம் ரூ.1200 கோடி மதிப்பில் லோயர் கேம்பிலிருந்து பைப் மூலம் கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது

தேர்தல் காலத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்வோம், நகைக்கடன் தள்ளுபடி செய்வோம் என்று சிலர் பொய்யாக பிரச்சாரம் செய்தனர். ஆனால் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதிதான் கொடுப்பார்கள். அதை நிறைவேற்ற மக்களிடத்தில் வாய்தா வாங்குவபவர்கள் தான் எதிர்கட்சியினர். நாங்கள் அப்படியல்ல. சொல்வதையும் செய்வோம், சொல்லாததையும் மக்களுக்கு செய்வோம்.

இன்றைக்கு முதியோர் மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 30 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர். இந்த திட்டத்தை வழங்க கூட 22 விதிமுறைகள் உள்ளது. அதையெல்லாம் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.