தற்போதைய செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவிப்பு…

சென்னை:-

ரேஷன்கடை ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு அளிக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவித்துள்ளார்.

சென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலையத்தினை மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் முன்னிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்களால், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம், 41 பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள் திறக்க திட்டமிடப்பட்டு, 27 பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலையங்கள் துவங்கி செயல்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, 28-வது நிலையம் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார் பேட்டையில்,காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்குச் சொந்தமான இடத்தில், 15,000 சதுர அடி பரப்பளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்னும், 13 நிலையங்கள் விரைவில் துவங்கப்பட உள்ளது.

இப்பண்டகசாலையின் மூலம் ஏற்கனவே, காஞ்சிபுரம் அருகில் உள்ள கோரினேரிகுப்பத்தில் ஒரு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையம் 31.01.2019 அன்று துவங்கி, செயல்பட்டு வருகின்ற நிலையில், செங்கல்பட்டு, பொன்னேரி மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இப்பண்டகசாலை மூலமாக 5 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு கடையிலும், ரூ.7 லட்சம் மதிப்பில், 300 வகையான பொருட்கள் வெளிச்சந்தை விலையை விட 5 சதவீதம் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இச்சிறப்பங்காடிகள் குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இச்சிறப்பங்காடிகளில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.8.17 லட்சம் அளவிற்கு மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இப்பண்டகசாலை மூலம் கிழக்கு தாம்பரம் (செம்பாக்கம்), மேற்கு தாம்பரம் (மகாலட்சுமி நகர்), மடிப்பாக்கம், குரோம்பேட்டை, பொழிச்சலூர் ஆகிய 5 இடங்களில் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.9.98 லட்சம் அளவிற்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இப்பண்டகசாலை ஒரு அம்மா மருந்தகம் மற்றும் ஒரு கூட்டுறவு மருந்தகத்தை நடத்தி வருகிறது. இங்கு, 20 சதவீதம் தள்ளுபடியில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.11.32 லட்சம் அளவிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மீன்வளத்துறை அமைச்சர் பெட்ரோல் நிலையம் அமைந்துள்ள இடத்தின் அருகில் கூட்டுறவுத்துறையின் சார்பில் திருமண மண்டபம் கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சர் அவர்களிடம் இது குறித்து ஆலோசித்து, மண்டபம் கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசுகையில், கூட்டுறவுத்துறையின் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. எடுத்துக்காட்டாக பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகள், அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடி, அம்மா மருந்தகம் போன்றவை ஆகும். வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை 9 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரயில் பணிகள் ரூ.3,770 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஜூன் 2020-ல் முடிவடையும். இதனால் இப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, சென்னை மண்டல கூடுதல் பதிவாளர், கோ.செந்தில்குமார், பண்டகசாலையின் மேலாண்மை இயக்குநர் ஆர்.பாபு, முன்னாள் அமைச்சர் இ.மதுசூதனன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முதன்மை பொது மேலாளர் வி.கோபாலகிருஷ்ணன், துணை பொது மேலாளர் அபிஷேக் ஷர்மா, ஆர்.எஸ்.ராஜேஷ், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் எம்.கூத்தன், துணைத்தலைவர் வைரமுத்து மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

நிகழ்ச்சி முடிந்ததம் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மக்களுக்கு தேவையான மேலும் பல பொருட்களை கூட்டுறவுத்தறை சார்பில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. ரேஷன் கடைகளில் கூடுதல் பொருட்களை வாங்கும்படி வற்புறுத்தக்கூடாது. எடை குறையாமல் பொருட்களை வழங்க வேண்டும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது குறித்து முடிவு செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன் பரிந்துரை அரசுக்கு கிடைத்ததும் சம்பள உயர்வு பற்றி அறிவிப்பு வெளியாகும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.