தற்போதைய செய்திகள்

தண்ணீர் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி…

மதுரை:-

தண்ணீர் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

தமிழகத்தில் மழை வேண்டி கழகத்தின் சார்பில் கடந்த 2 நாட்களாக கோயில்களில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதான நிகழ்ச்சியை மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் வறட்சியின் காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை போர்க்கால அடிப்படையில் முதலமைச்சர் சரிசெய்து வருகிறார். தொடர்ந்து மக்களுக்கு குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை எங்களை போன்ற அமைச்சர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கி வருகிறார். அதனை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

ஆனால் இன்றைக்கு குடிநீர் பிரச்சினை பற்றி சிங்கப்பூரில் இருந்து யாரோ எழுதி கொடுப்பதை வாசித்துக்கூட பார்க்காமல் அப்படியே ஊடகங்களுக்கு ஸ்டாலின் அனுப்பி வருகிறார். ஆனால் நாங்கள் அப்படியல்ல. இன்றைக்கு களத்தில் இருந்து மக்கள் குறைகளை போக்கும் அரசாக நாங்கள் உள்ளோம். தமிழகத்தில் நிலவும், குடிநீர் பற்றாக்குறையை முதலமைச்சர் விரைவில் சரிசெய்து விடுவார். திமுக குடிநீர் பிரச்சினையில் இரட்டை வேடம் போடுகிறது.

ஒருபுறம் தண்ணீர் இல்லை என்று கூறி, மறுபுறம் ஜோலார்பேட்டையிலிருந்து குடிநீரை கொண்டு வரக்கூடாது என்று கூறி வருகிறது. எனவே மக்கள் உழைக்கும் அரசு எது, பொய்யான செய்தியை பரப்பி அதன் மூலம் குளிர்காய நினைப்பவர்கள் யார் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் ேக.ராஜூ பேசினார்.