தற்போதைய செய்திகள்

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் தரமான பொருட்கள் விற்க நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்…

சென்னை:-

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் தரமான பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, நேற்று சென்னை பூங்கா நகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் தலைமையிடமான அண்ணா நகரில் அமைந்துள்ள பண்ணைப் பசுமை நுகர்வோர்கடையினை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் காய்கறிகளின் விலை, விற்பனை மற்றும் தரம் குறித்து விவரங்கள் கேட்டறிந்தார்.

பின்னர், அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மா அறிவித்த பல்வேறு மக்கள் நலத்திட்டங்களில், பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் திட்டம் உன்னதமான திட்டமாகும். தமிழகமெங்கும் 3 நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் உட்பட 79 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், 06.06.2019 வரை 45,356 மெ.டன் காய்கறிகள் ரூ.131.71 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் பூங்கா நகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நடத்தும் 4 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் உட்பட மொத்தம் 43 கடைகள் செயல்பட்டு வருகிறது, இதன் மூலம் 06.06.2019 வரை 27,043 மெ.டன் காய்கறிகள் ரூ.25.18 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை பூங்கா நகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நடத்தும் நான்கு பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் மட்டும் 10.06.2019 வரை 1,901 மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ.5.78 கோடி மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வின்போது அதனை கட்டுப்படுத்தி, பொதுமக்கள் குறைந்தவிலையில் தரமான பொருட்களை பெற ஏதுவாக கூட்டுறவுத் துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கென புரட்சித்தலைவி அம்மா அவர்கள், கூட்டுறவுத்துறை மூலம் சந்தை குறுக்கீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக ரூ.100 கோடியில் விலை கட்டுப்படுத்தும் நிதியத்தினை ஏற்படுத்தினார். இதன் மூலம், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும்போது, அப்பொருட்களை அதிக அளவில் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

தற்போது மழை பொழிவு குறைந்துள்ளதால், காய்கறிகள் வரத்து குறைந்து காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகின்றன. எனினும், கூட்டுறவு துறையின் மூலம் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் வெளிச்சந்தையைவிட குறைவான விலையில், தரமான காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை களைவதில் கூட்டுறவு நிறுவனங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன.

அனைத்து தரப்பு மக்களும் தரமான மருந்துகளை 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பெற்று பயனடையும் வகையில் 112 அம்மா மருந்தகங்கள் மற்றும் 172 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் 30.04.2019 வரை ரூ.809.70 கோடி மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதில், சென்னையில் 8 கூட்டுறவு மருந்தகங்களும் 7 அம்மா மருந்தகங்களும் என மொத்தம் 15 மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் ரூ. 8.22 கோடி விற்பனைசெய்யப்பட்டுள்ளது என்றார்.

இவ்வாய்வின்போது, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் (பொறுப்பு) கு.கோவிந்தராஜ், பூங்கா நகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் மேலாண்மை இயக்குநர் கே.தேவிபிரியா, இணைப்பதிவாளர், அ.முருகானந்தம். பூங்கா நகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைத் தலைவர் ப்பி.மோகனரங்கன் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.