தற்போதைய செய்திகள்

புதிய பாடத் திட்டத்துக்கு உ.பி அரசு பாராட்டு – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு…

ஈரோடு:-

ஒரு மரம் நட்டு பராமரிக்கும் மாணவருக்கு 2 மதிப்பெண் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி கே.வி.கே.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிகணினி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு மடிகணினிகளை வழங்கி பேசினர்.

விழாவில் அமைச்சர் கே.ஏசெங்கோட்டையன் பேசியதாவது:-

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் மடிகணினி வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 10 லட்சத்து 80 ஆயிரம் மடிகணினிகள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து போட்டி தேர்வுகளையும் எதிர் கொள்ளக்கூடிய வகையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட பாட திட்டத்தை பார்த்து உத்தரபிரதேச மாநில துணை முதல்வர் பாராட்டி உள்ளார். இது போன்ற திட்டம் தனது மாநிலத்திலும் நிறைவேற்ற உத்தரபிரதேசம் வர அம்மாநில துணை முதல்வர் அழைத்து உள்ளார்.

இன்னும் 3 மாதத்தில் 2017- 18-ம் ஆண்டு படித்த மாணவ- மாணவிகளுக்கு மடிகணினிகள் வழங்கப்படும். 2,3,4,5- ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓரிரு வாரத்தில் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும். தேர்தல் விதிமுறை அமலில் இருந்ததால் பள்ளி சீருடைகள் வழங்க காலதாமதமானது. அடுத்த வாரத்துக்குள் வண்ண சீருடைகள் வழங்கப்படும்.

“குவிக் ரெஸ்பான்ஸ்” என்று சொல்லக்கூடிய ஆங்கிலத்தை சரளமாக பேசுவதற்கு 2 ஆயிரம் சொற்கள் அடங்கிய புதிய ‘சாப்ட்வேர்’ பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. பள்ளி மாணவ- மாணவிகள் 1½ கோடி மரங்கள் நடவும் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு மரத்துக்கு 2 மதிப்பெண்கள் வழங்கப்படும்.‘ அதாவது ஒரு மாணவன் ஒரு மரத்தை நட்டு பராமரித்தால் 2 மதிப்பெண் வழங்கப்படும். அரசு பள்ளிகளில் போதிய தண்ணீர் வசதி செய்யப்பட்டு உள்ளது. தனியார் பள்ளி நிர்வாகிகள் தங்களுக்கு தேவையான தண்ணீரை வாகனங்கள் மூலம் அவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசினார்.