தற்போதைய செய்திகள்

காட்டுகாநல்லூர் தர்மராஜா ஆலயத்தில் அமைச்சர் சாமி தரிசனம் – பஞ்சலோக சிலை செய்ய அனுமதி கோரி உபயதாரர்கள் மனு….

திருவண்ணாமலை:-

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த காட்டுகாநல்லூரில் உள்ள தர்மராஜா ஆலயத்திற்கு பஞ்சலோக சிலைகள் செய்ய அனுமதி கோரி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அவர்களிடம் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காட்டுகாநல்லூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள தர்மராஜ ஆலயம் புதுப்பிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மண்டலாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. இவ்வாலயத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வருகைதந்து சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு ஆலய விழா குழுவினர் மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர்.

ஆலயத்தில் மரச்சிலைகள் உள்ளது. அது மிகவும் பழுதடைந்துள்ளது. சீரமைத்தாலும் மீண்டும் பழுதாகிறது. ஆகையால் ஆலயத்திற்கு திரௌபதி சிலை, அர்ஜீணன் சிலை, பீமன் சிலை, கிருஷ்ணன் சிலை, சுபத்திரை சிலை, போத்ரஜா சிலை, நகுலன் சிலை, சகாதேவன் சிலை, அபிமன்யூ சிலை, குந்தி சிலை உள்ளிட்ட பஞ்சலோக சிலைகள் உபயதாரர்கள் மூலம் செய்து கொள்ள இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கவேண்டும் என்று ஆலய உபயதாரர்கள் சார்பில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரனிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் உடனடியாக அனமதி பெற்று தர ஆவன செய்யப்படுவதாக உறுதியளித்தார்.

அப்போது உடன் முன்னாள் மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத்தலைவர் க.சங்கர், வேலூர் பால் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் பாரி பி.பாபு, மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் எம்.வேலு, ஆரணி ஒன்றிய செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர், பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சேவூர் ஜெ.சம்பத், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ப.திருமால் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.