சிறப்பு செய்திகள்

திமுக- காங்கிரஸ் கூட்டணி தான் தமிழகத்திற்கு துரோகம் இழைத்தது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி…

கோவை:-

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி தான் தமிழகத்திற்கு துரோகம் இழைத்தது என்றும் கழகத்தின் வாக்கு வங்கி குறையவில்லை என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியிலுள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 4ம் அணியில் பணிபுரியும் காவலர்களுக்கு ரூ.10.88 கோடி மதிப்பில் 137 அடிக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு நேற்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியால் காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கப்பட்டது.

கோவைப்புதூர் சிறப்பு காவல் 4ம் அணி வளாகத்தில் நடைபெற்ற காணொளி காட்சியில் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னையில் நேற்று நடந்த கூட்டம், தேர்தலுக்கு பிறகு நடத்த திட்டமிடப்பட்ட ஆலோசனை கூட்டம் தான். இதில் கட்சியை பலப்படுத்துவது, உள்ளாட்சி தேர்தலுக்கு தாயாரவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்துகிறார்கள். இதில் எந்த பிரச்சனையும் இல்லை .

தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான கழக ஆட்சி தொடர வேண்டும் என கோவை மாவட்டம் சூலூர் தொகுதி உட்பட 9 சட்டமன்ற தொகுதியில் மக்கள் வாக்களித்துள்ளனர். பல்வேறு சோதனைகளை தாண்டி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மாவால் வளர்க்கப்பட்ட பேரியக்கம் அ.தி.மு.க. ஊடகங்கள் மட்டும் அல்ல, எதிர்கட்சிகளும் அ.தி.மு.க,விற்குள் ஏதாவது குழப்பம் நடக்கும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அதுபோல எதுவும் நடக்காது.

புதுடெல்லியில் தண்ணீர் மேலாண்மை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பஙகேற்றேன். அப்போது மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் பியூஸ்கோயல் ஆகியோரை சந்தித்து கோரிக்கைகளை முன் வைத்தேன். தமிழகத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. தமிழகத்தில் 5 ஆயிரம் கோடி நிதியில் குடிநீர் விநியோகத்திற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க வெற்றி பெற்றதை மக்கள் தற்போது புரிந்துள்ளனர். எனவே அதன் முடிவு உள்ளாட்சி தேர்தலில் தெரியும் எனவும் சுட்டிக்காட்டினார். பா.ஜ.க தமிழகத்திற்கு எந்த துரோகமும் செய்யவில்லை. திமுக- காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்த போது தான் தமிழகத்திற்கு எண்ணற்ற துரோகம் செய்தது. சூலூர் தொகுதி எப்போதும் கழகத்தின் கோட்டை. கழகத்தின் வாக்கு வங்கி குறையவில்லை.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.