சிறப்பு செய்திகள்

குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை – தமிழக அரசு அறிவிப்பு…

தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை எக்காரணம் கொண்டும் ஏற்படாமல் தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இருப்பதாகவும், வரும் நவம்பர் மாதம் வரை குடிநீர் பிரச்சினை ஏற்படாது என்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். 

சென்னை:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி 29.05.2019 அன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் மாநிலத்தில் குடிநீர் விநியோகம் குறித்து ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 14 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகள் மற்றும் 12,524 ஊராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகம் குறித்தும், கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் விநியோகப் பணிகள் குறித்தும், மாநில மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்களிடம் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய கூட்ட அரங்கத்தில் நேற்று விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் குடிநீர் விநியோகப் பணிகளை மேற்கொண்டு வரும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி நிர்வாகத்துறை, பேரூராட்சிகள் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகம், அவற்றின் அளவு மற்றும் நீர் இருப்பு குறித்தும் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில், 2016-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக மிக குறைந்த அளவில் மழை பெய்துள்ளது. பருவமழை பொய்த்த காரணத்தால் கோடைகாலத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் பொருட்டு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகம் குறித்தும், கோடைகாலத்தில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் குடிநீர் வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் அலுவலர்களிடம் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

அதேபோல தமிழகத்தின் இதர பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகம் குறித்தும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அலுவலர்களிடம் அமைச்சர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.பருவமழை பொய்த்ததன் காரணமாக கோடைகாலத்தில் ஏற்படவுள்ள குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க பொதுமக்கள் அனைவரும் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமான முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் மேலும் பொதுமக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமான முறையில் குடிநீர் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்த ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

மேலும் மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் ஆகியோர் தங்கள் பகுதிகளில் குடிநீர் வழங்கல் பணிகளை காலை 6.00 மணி முதல் நேரில் ஆய்வு செய்தும் மாலையில் அனைத்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டும் குடிநீர் வழங்கல் பணிகளை சிறப்புக் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்றும், அதனை துறையின் உயர் அலுவலர்கள் நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்ததாவது:-

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவான 12,722 மில்லியன் கன அடியில் நாளது தேதியில், 837 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே அதாவது 6.80 ரூ மட்டுமே நீர் இருப்பில் உள்ளது. கடந்த ஆண்டில், இதே தேதியில் 2,916 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது.மீஞ்சூர் மற்றும் நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களிலிருந்து நாளொன்றுக்கு தலா 100 ஆடுனு குடிநீர் பெறப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

பருவமழை பொய்த்ததன் காரணமாக அனைத்து ஏரிகளிலும் நீர் இருப்பு குறைந்த அளவே இருந்த போதிலும் தற்போதுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், வீராணம் திட்டம், நெய்வேலி நீர்ப்படுகையிலிருந்து கூடுதலாக புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், விவசாய கிணறுகள் வாடகைக்கு அமர்த்துதல் சிக்கராயபுரம் கல்குவாரி உள்ளிட்ட குடிநீர் ஆதாரங்கள் மூலம் நாளொன்றுக்கு 525 மில்லியன் லிட்டர் குடிநீர் அளவு வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகரின் கோடைக்கால குடிநீர்த் தேவையை சமாளிக்க சென்னை மாநகரின் கோடைக்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாண்புமிகு அம்மாவின் அரசு மொத்தம் 233.72 கோடி ரூபாயினை ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நெய்வேலி நீர்ப்படுகையில் கூடுதலாக 9 புதிய ஆழ்துளை கிணறுகள் மூலம் 10 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுத்தல், நெய்வேலி சுரங்கம், பரவனாறு ஆற்றில் இருந்து ரூ.6.67 கோடி மதிப்பீட்டில் 60 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறவும் மற்றும் பூண்டி, தாமரைப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயக் கிணறுகள் மூலம் 95 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறுவதற்கான பணிகள் துவங்கப்பட்டு, தற்போது தினமும் 45 மில்லியன் லிட்டர் எடுக்கப்பட்டு வருகின்றன.

சிக்கராயபுரம் கல்குவாரி மூலம் பிப்ரவரி மாதம் முதல் ரூ. 11 கோடி மதிப்பீட்டில் 30 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எருமையூர் கல்குவாரியிலிருந்து ரூ.19.17 கோடி மதிப்பீட்டில் 10 மில்லியன் லிட்டர் குடிநீர் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இரட்டைஏரி, பெரும்பாக்கம், அயனம்பாக்கம் ஏரிகளிலிருந்து 30 மில்லியன் லிட்டர் நீரை சுத்திகரித்து குடிநீர் வழங்க ரூ.53 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இரட்டை ஏரியில் பணிகள் முடிக்கப்பட்டு, நீர் பெறுவதற்கான பணி துவங்கப்பட்டுள்ளது.

இதர தேவைகளுக்கு கூடுதலாக 358 இந்தியா மார்க் 2 பம்புகள், மற்றும் 126 மின்மோட்டார் பொருத்திய ஆழ்துளை கிணறுகள் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதியதாக 1,190 HDPE தொட்டிகள் நிறுவப்பட்டுள்ளன.தற்போது 74 சிறிய லாரிகள் மூலம் (2000 முதல் 3000 லிட்டர் கொள்ளளவு தொட்டிகள் கொண்டு) குறுகிய தெருக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இன்னும் 15 தினங்களில் மேலும் 126 லாரிகளின் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு 9,000 லாரி நடைகள் மூலம் ஏறத்தாழ 880 குடிநீர் ஊர்திகளை வாடகைக்கு அமர்த்தி, அதில் 6500 நடைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 2500 நடைகள் தொலைபேசி மூலம், ஆன்லைன் புக்கிங் மூலம் கட்டண சேவையாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்தமுறையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நுகர்வோர் பதிவு செய்யும் நாளிலிருந்து அடுத்த இரண்டு நாட்கள் வரை தேவைப்படும் லாரி நடையை முன்கூட்டியே பதிவு செய்ய இயலும். மேலும் நுகர்வோர் தேர்வு செய்யும் நாளில் காலதாமதம் இன்றி குடிநீர் வழங்க இயலும். நுகர்வோரின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு இச்சேவைக்காக தற்சமயம் 2,000 லிட்டர் மற்றும் 3,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 200 எண்ணிக்கையில் சிறிய ரக லாரிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

மழைப்பொழிவு இல்லாவிடினும், சென்னை மாநகர மக்களுக்கு ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் முடிய நாளொன்றுக்கு 500 மில்லியன் லிட்டர் குடிநீர் தடையின்றி விநியோகம் செய்யப்படும்.நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 MLD திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை வடிவமைத்து நிறுவி, 20 வருடங்கள் இயக்கி பராமரிக்கும் பணிக்காக திருவாளர்கள் கோப்ரா, ஸ்பெயின் மற்றும் டெக்டான் யு.எ.இ., கூட்டு ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.1689.35 கோடிக்கு 27.5.2019 அன்று பணி ஆணை வழங்கப்பட்டது. பருவமழை பொய்த்தாலும், இந்த குடிநீர் ஆதாரங்களைக் கொண்டு, சென்னை மாநகர மக்களுக்கு ஜூன் மாதம் முதல் நாளொன்றுக்கு 500 மில்லியன் லிட்டர் குடிநீர் தொடர்ந்து நவம்பர் மாத இறுதி வரை விநியோகம் செய்யப்படும்.

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள்

கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, சேலம், வேலூர், ஈரோடு, தஞ்சாவூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 8 மாநகராட்சிகளில், 110 லிட்டருக்கு மேலும் திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், நாகர்கோவில் மற்றும் ஓசூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் 70 முதல் 109 லிட்டர் வரை குடிநீர் வழங்கப்படுகிறது. மொத்தமுள்ள 122 நகராட்சிகளில், 61 நகராட்சிகளில், 90 லிட்டருக்கு மேலும், 61 நகராட்சிகளில், 40-89 லிட்டர் வரையிலும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 5 மாநகராட்சிகள் மற்றும் 30 நகராட்சிகளில் 3 தினங்களுக்கு மேல் குடிநீர் வழங்கும் நிலை உள்ளது. கோடைகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, 7 மாநகராட்சிகள் மற்றும் 80 நகராட்சிகளில் ரூ.56 கோடி மதிப்பீட்டில் 2346 குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ள செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சிகள்

அனைத்து 528 பேரூராட்சிகளிலும், 70-90 லிட்டர் வரையில், குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 515 பேரூராட்சிகளில் தினசரி குடிநீர் 13 பேரூராட்சிகளில் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. வரும் காலத்தில் பாதிப்புக்குள்ளாகும் பேரூராட்சிகளில், 18 திறந்தவெளி கிணறுகளும், 132 பவர் பம்புடன் கூடிய ஆழ்துறை கிணறுகள் அமைக்கும் பணிகளுக்கு ரூ.16.31 கோடி பேரிடர் நிவாரண நிதியின் கீழ் நிதி தேவைப்படுகிறது. பொது நிதி ஆதாரமுள்ள பேரூராட்சிகளில் மேற்படி பணிகளை உடன் மேற்கொள்ளும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதிகள்

12,524 ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், 548 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மற்றும் தனி குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளால், மொத்தம், 1.15 இலட்சம், விசைப்பம்புகள், 1.23 லட்சம் சிறு மின்விசைப் பம்புகள், 1.96 லட்சம் கைபம்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

ஊரகப் பகுதிகளில், மொத்தமுள்ள 79,394 குக்கிராமங்களில், நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 9,614 குக்கிராமங்களில் – 40 லிட்டருக்கு குறைவாகவும் 46,802 குக்கிராமங்களில் 40 முதல் 55 லிட்டர் வரையிலும் 22,978 குக்கிராமங்களில், 55 லிட்டருக்கு மேலும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கிராம வாரியாக செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் ரூ.449 கோடி மதிப்பீட்டில் 30,951 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநில நிதிக்குழு மான்யம் மற்றும் மத்திய நிதி குழு மான்ய நிதியில் முன்னுரிமை அடிப்படையில் குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது ரூ.134 கோடி மதிப்பீட்டில் 12,339 பணிகள் குடிநீர் பணிகள் அனுமதிக்கப்பட்டு, நாளது தேதியில் 9,887 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

ஊரகப் பகுதிகளில், கடந்த 2017-18 மற்றும் 2018-19ம் ஆண்டுகளில், 64,841 குடிநீர் பணிகள் ரூ.1,061 கோடியில் முடிக்கப்பட்டுள்ளன. குடிநீர் விநியோகத்தினை கண்காணிக்க மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் புகார் கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 547 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 8 மாநகராட்சிகள், 66 நகராட்சிகள், 323 பேரூராட்சிகள், 46,438 ஊரகக் குடியிருப்புகளில் வசிக்கும் 4.18 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் நாளொன்றுக்கு 2,061 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டு, தற்சமயம் நாளொன்றுக்கு 1,493 மில்லியன் லிட்டர் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள சென்னை நீங்கலான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கோடைகால குடிநீர்த் தேவையை சமாளிக்க மொத்தம் சுமார் ரூ.675 கோடி மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், பழைய ஆழ்துளை கிணறுகளை புதுப்பித்தல், லாரிகள் மூலம் குடிநீர் வழங்குதல், பழுதடைந்த மோட்டார்கள் மாற்றுதல், மின் ஆக்கிகள் வாடகைக்கும், புதிதாகவும் வாங்குதல், கைபம்புகள் நிறுவுதல், பைப்லைன் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.