சிறப்பு செய்திகள்

மழைநீர் சேமிப்பு, வறட்சி நிவாரணம் குடிநீர் திட்டங்களுக்கு ரூபாய் 5398 கோடி- மத்திய அமைச்சரிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்…

சென்னை:-

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை  புதுடெல்லியில் நேரில் சந்தித்தார். அமைச்சருடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா உடனிருந்தார்.

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் திண்டிவனம் பகுதிகளில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள், சிவகங்கை மாவட்டத்திற்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம், குடிநீர் திட்டங்களை புனரமைத்தல், மழைநீர் சேகரிப்புத் திட்டங்கள் மற்றும் வறட்சி நிவாரணம் ஆகியவற்றிற்கு தேவையான ரூ.5,398 கோடி நிதியை வழங்க கோரிக்கை விடுத்தார்.

இதுசம்பந்தமாக மத்திய அமைச்சரிடம் எஸ்.பி.வேலுமணி கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மற்றும் திண்டிவனம் நகரசபை, மரக்காணம் விக்கிரவாண்டி நகர பஞ்சாயத்து மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 10 பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள 160 ஊரகக் குடியிருப்புகளுக்கு 100 மில்லியன் லிட்டர் தினசரி குடிநீர் வழங்கும் வகையில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை மற்றும் அது சம்பந்தப்பட்ட குழாய் பதிப்புப் பணிகளுக்காக சுமார் ரூ.2000 கோடி. இதன் மூலம் 16 லட்சத்து 78 ஆயிரம் மக்கள் பலனடைவார்கள்.

காவிரி தண்ணீரை ஆதாரமாகக் கொண்டு சிவகங்கை மாவட்டத்தில் 8 நகர பஞ்சாயத்து களுக்கும், 2452 ஊரகக் குடியிருப்புகளுக்கும் ஒருங்கிணைந்த குடிநீர் சப்ளை திட்டங்களுக்கு ரூ.1800 கோடி. இதன் மூலம் தினசரி 78.40 மில்லியன் லிட்டர் தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்படும். இதன் மூலம் 10 லட்சத்து 77 ஆயிரம் மக்கள் பயனடைவார்கள்.

ஒருங்கிணைந்த குடிநீர் சப்ளை திட்டங்களின் செயல்பாட்டை சீரமைத்து, சிறப்பான முறையில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.1000 கோடி.

தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் பராமரித்து வரும் ஒருங்கிணைந்த குடிநீர் சப்ளை திட்டங்களுக்காக சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.100 கோடி.

தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம் பராமரித்து வரும் ஒருங்கிணைந்த குடிநீர் விநியோகம் திட்டங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கி, நீர் ஆதாரத்துக்கான வழிகளை மேம்படுத்தி, பராமரிக்கும் பணிகளுக்காக ரூ.50 கோடி (463 பணிகள்).

பல்வேறு வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.448 கோடி உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேவை இப்படி பல்வேறு குடிநீர் திட்டங்களை மேற்கொள்வதற்கு தமிழக அரசுக்கு இந்தத் தொகையை மத்திய அரசு உடனடியாக ஒதுக்கித் தர வேண்டும்.

ஒவ்வொரு வீட்டுக்கும் போதுமான அளவில் தரமான குடிநீர் விநியோகம் செய்வதில் முதல்வர் தலைமையில் தமிழக அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. மாநிலத்தில் உள்ள ஊரகப் பகுதிகளில் 99.98% வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 14 மாநகராட்சிகள், 122 நகர சபைகள், 528 நகர பஞ்சாத்துக்கள், 385 பஞ்சாயத்து யூனியன்கள் உள்ளன. இதில் 12,524 கிராம பஞ்சாத்துகளும் அடங்கும். மொத்த மக்கள் தொகை 7 கோடியே 28 லட்சம் பேர். இப்போது தமிழ்நாடு குடிநீர் விநியோகம் வடிகால் வாரியம் மற்றும் வடிகால் வாரியம் சென்னை பெருநகர் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம், மற்றும் இதர உள்ளூர் அமைப்புகளால் 600 பெரிய குடிநீர் சப்ளை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

2016ம் ஆண்டில் மாநிலம் வரலாறு காணாத அளவுக்கு வறட்சியை சந்தித்தது. 2017ல் மாநிலத்தில் போதுமான அளவுக்கு மழை இல்லை. 2018ல் சராசரி மழை அளவுக்கு குறைவாக 24% மட்டுமே மழை பெய்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களும், 7 மாவட்டங்களில் 38 வட்டாரங்களும் மழை குறைந்த பகுதிகளான நிலையில் இங்கெல்லாம் கடுமையான வறட்சி நிலை ஏற்பட்டது. பருவ மழை பொய்த்ததைத் தொடர்ந்து, குடிநீர் சப்ளை செய்வதில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடும் சோதனை ஏற்பட்டுள்ளது. சவால்களும் ஏற்பட்டுள்ளது.

சென்னை பெருநகரைப் பொறுத்த வரையில் ரூ.7337 கோடியே 78 லட்சம் செலவில் கடல் நீரை குடிநீராக்கும் 2 பெரிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் 550 மில்லியன் லிட்டர் தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்படும். இந்தத் திட்டம் 2022ல் நிறைவேற்றி முடிக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள கிராமப் பகுதி மக்களுக்கு போதுமான குடிநீரை விநியோகம் செய்வதற்கு ஏதுவாக ஒருங்கிணைந்த குடிநீர் சப்ளை திட்டங்களுக்கு ரூ.5,398 கோடியை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.