சிறப்பு செய்திகள்

குடிநீர் பிரச்சினைகளை தெரிவிக்க புகார் பெட்டி – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடவடிக்கை…

சென்னை:-

குடிநீர் பிரச்சினைகளை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு வார்டிலும் முக்கிய இடங்களில் புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவி்ட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளில் சீர்மிகு நகரத் (Smart City) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அம்ரூத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில்  எம்.ஆர்.சி. நகரில் உள்ள நகர நிர்வாக அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் (Smart City) ரூ.11,296.30 கோடி மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்ட 326 திட்டங்களின் தற்போதையை நிலை குறித்தும், 12 மாநகராட்சிகள், 15 நகராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.11,441 கோடி மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்ட 445 திட்டங்களின் தற்போதைய நிலைப்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சீர்மிகு நகரத் திட்டம் (Smart City) மற்றும் அம்ரூத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்கவும், மீதமுள்ள பணிகளை விரைந்து துவங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

கூட்டத்தின்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்ததாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், அனைத்து பகுதிகளிலும் உள்ள தலைமை நீர்த்தேக்க மையங்கள், தலைமை நீர் உந்து மையங்கள் மற்றும் நீரேற்று மையங்கள் ஆகியவற்றை தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் எனவும், குடிநீர் விநியோகக் குழாய்களில் அடைப்புகள் ஏற்படின் அவற்றை உடனடியாக சரிசெய்து சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.

பழைய திறன் குறைந்த மின் மோட்டார்களை ஆய்வு செய்து, தேவைப்படின் அவற்றை உடனுக்குடன் மாற்றவும், அனைத்து ஜெனரேட்டர்களும் இயங்கும் நிலையில் உள்ளனவா என்பதை உறுதி செய்து, தேவைப்படின் தனியார் ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து குடிநீர் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும்.

குளோரின் கலந்த பாதுகாப்பான குடிநீரை அன்றாடம் விநியோகம் செய்யவும், பொதுக்குழாய்களில் தண்ணீர் வீணாகாமல் தடுக்கவும், நீராதாரங்களில் நீர்மட்டம் குறைந்தால் தனியார் கிணறுகளையும், சமுதாயக் கிணறுகளையும் தூர்வாரி குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்து, பாதுகாக்கப்பட்ட குடிநீரை உறுதி செய்து பொதுமக்களுக்கு வழங்கவும், குழாய் மூலம் குடிநீர் வழங்க இயலாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்க வேண்டும்.

கணினி மற்றும் தொலைபேசி மூலம் குடிநீர் குறித்த புகார்களை பெறவும், குடிநீர் பற்றிய புகார்களை பெற ஒவ்வொரு வார்டிலும் முக்கிய இடங்களில் புகார் பெட்டிகளை வைக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். புகார்களின் மீது அன்றாடம் மாலை கலந்தாய்வு செய்து உடனடியாக அதற்கு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு தீர்வு காண வேண்டும்.

மேலும், ஒருசில வீடுகளில் மின்மோட்டார்களை வைத்து தண்ணீரை உறிஞ்சி, மற்ற பகுதிகளுக்கு குடிநீர் செல்வதை தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கூட்டு குடிநீர் திட்டமாக இருப்பின் தமிழ்நாடு குடிநீர் வாரிய அலுவலர்களுடன் இணைந்து சீரான முறையில் குடிநீர் வழங்குவதை அனைத்து தொடர்புடைய அலுவலர்களுடன் உறுதி செய்ய வேண்டும்.

பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்கள், வாரம் ஒருமுறை அனைத்து செயல் அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவிசெயற்பொறியாளர்களுடன் இணைந்து ஆய்வுக்கூட்டம் நடத்தி பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் சீரானமுறையில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். குழாய் மூலம் குடிநீர் வழங்க இயலாத பகுதிகளில் உடனுக்குடன் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும், குடிசைப் பகுதிகளிலும், ஏழைமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் அதிகக் கவனம் செலுத்தி சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும்.

பொதுமக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமான முறையில் குடிநீர் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்த ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், தற்போது குடிநீர் பிரச்சனைகள் குறித்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் பரவலாக செய்திகள் வருவதால், அனைத்து அலுவலர்களும் விழிப்புடன் இருந்து குடிநீர் வழங்கல் பணியை சிறப்புடன் செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர்சிங், நகராட்சி நிர்வாக ஆணையாளர் முனைவர் தா.கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிதி சேவை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ககர்லா உஷா, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிகரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என்.மகேஸ்வரன், பேரூராட்சிகளின் இயக்குநர் எஸ்.பழனிச்சாமி, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய செயல் இயக்குநர் டாக்டர் டி.பிரபு சங்கர் மற்றும் அனைத்து மாநகராட்சி ஆணையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.