சிறப்பு செய்திகள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி சந்திப்பு…

புதுடெல்லி:-

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சந்தித்து பல்வேறு துறைகள் சார்பில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து கோரிக்கை வைத்தனர்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை விடுவிக்க வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் டெல்லியில் மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து பல்வேறு துறைகள் சார்பில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து கோரிக்கை வைத்தனர். அப்போது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழகத்துக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை மத்திய அமைச்சரிடம் வழங்கினார்.

அதன் விவரம் வருமாறு:-

14-வது மத்திய நிதிக் குழுவின்படி தமிழகத்தைச் சேர்ந்த ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2-வது தவணையாக ரூ.1,608.03 கோடியை விடுவிக்க வேண்டும். மேலும், 2017 18ம் நிதியாண்டுக்கான செயல்பாட்டு நிதியாக ரூ.560.15 கோடி நிதியை அளிக்க வேண்டும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்படி 2 லட்சம் வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் வழிகாட்டும் நெறிமுறைகளின் படி, 60 சதவீத வீடுகளை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்க வேண்டும்.

சேரன், நீலகிரி விரைவு ரயில்களில் குளிர்சாதன வசதி இல்லாத முதல் வகுப்பு பெட்டிகள் பயன்பாட்டில் இருந்தன.
பயணிகளுக்கு நல்ல வசதியாக இந்த பெட்டிகள் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரத்து செய்யப்பட்டன. இதனை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்.

மதுக்கரை ரெயில்வே நிலையத்துக்கு அருகேயுள்ள மரப்பாலத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். கோவை மாவட்டம் மதுக்கரை ரெயில் நிலையத்தில் 100 மீட்டர் பரப்பில் இருந்த ரெயில்வே துறையின் நிலம் பொது மக்கள் மற்றும் வாகனங்களின் பயன்பாட்டுக்கு இல்லாதபடி மூடப்பட்டுள்ளது. இதனால், 3 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றிச் சென்று மதுக்கரை ரெயில்வே நிலையத்தை அடைய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்த நிலையைப் போக்க வேண்டும். கோயம்புத்தூரில் உள்ள விமான நிலைய ஓடுதளத்துக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக விமான நிலையத்தையும் விரிவாக்கம் செய்ய வேண்டும். இதற்காக ஏற்கனவே திட்டமிட்டபடி 627.89 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க வேண்டும் இதன்மூலம், வணிகர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசினர்.