சிறப்பு செய்திகள்

சென்னை மக்களுக்கு விரைவில் ஜோலார்பேட்டை தண்ணீர் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி…

சென்னை:-

சென்னை மக்களுக்கு விரைவில் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதிபட தெரிவித்தார்.

சென்னையில்  உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க 11 ஆயிரத்து 360 லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இதுபோன்று தண்ணீர் யாரும் தந்ததில்லை. தண்ணீர் பிடிக்க லாரிகளில் உள்ள பம்புகளை அதிகப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தெரிவித்தேன். தற்போது லாரிகள் 4 பம்புகள் பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் 5 பம்புகள் (குழாய்கள்) பொருத்தப்படும். இதன் காரணமாக நேரம் மிச்சமாகும். பொதுமக்கள் குறைவான நேரத்தில் தண்ணீர் பிடிக்கலாம்.

ஆன்லைனில் பதிவு செய்தால் தண்ணீர் லாரி வர நீண்ட நாட்கள் ஆகிறது என்று தெரிவித்தார்கள். இதனை தவிர்க்க பக்கத்து மாவட்டத்தில் உள்ள லாரிகளை கொண்டுவர உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் நிரப்பும் இடங்களில் இரு மடங்கு வசதிகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக லாரிகள் தண்ணீரை விரைவாக பிடிக்க முடியும். இதுபோன்ற நடவடிக்கையால் மக்களுக்கு சிரமங்கள் குறையும்.

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் 2 வாரங்களில் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டிற்கு இன்னும் நல்ல மழை தேவை உள்ளது. மழை நீர் சேகரிப்பு திட்டத்தை கண்காணிக்கக் குழு அமைக்கப் பட்டுள்ளது. நிறைய குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது.

அனைத்து பகுதிகளிலும் மழை நீர் வீணாகக்கூடாது என்பதற்காகத்தான் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை மாற்றி அமைத்துள்ளோம். 2017 ம் ஆண்டு கடுமையான வறட்சி வந்தபோதுகூட 450 எம்.எல்.டி. தண்ணீர்தான் வழங்கினோம். தற்போது வழங்கப்பட்டுவரும் தண்ணீரைத் தொடர்ந்து நவம்பர் வரை வழங்குவோம்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.