சிறப்பு செய்திகள்

தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டனர் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

கோவை

தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் இனி எடுப்படாது. அவர்களுக்கு பாடம் புகட்டமக்கள் தயாராகி விட்டனர் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட விளாங்குறிச்சி அம்மா கலையரங்கத்தில் 1,000 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கு கோவை மாநகர மாவட்ட அவைத்தலைவரும், கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.சி.ஆறுக்குட்டி தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 1000 கர்ப்பிணிகளுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல்கள் அடங்கிய சீமந்த சீர்வரிசை பொருட்கள் அடங்கிய தாம்பாளத்தை கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. கழக ஆட்சியில் பெண்களுக்காக தாலிக்கு தங்கம், வேலைக்கு செல்லும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் உள்பட எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இங்கு நடைபெறும் இவ்விழாவில் 1,000 கர்ப்பிணி பெண்களுக்கு ஒரே நேரத்தில் சீர்வரிசை நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான கழக அரசு மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. 50 ஆண்டுகாலம் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் செய்துள்ளோம். கவுண்டம்பாளையம் தொகுதியில் மட்டும் ரூ.2,700 கோடிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது,

நாடாளுமன்ற தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை கூறி திமுகவினர் வெற்றி பெற்றனர். பொய் வாக்குறுதி அளித்த திமுகவிற்கு பாடம் புகட்டும்வகையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் கழகத்திற்கு மாபெரும் வெற்றியை தந்தனர். தற்போது தமிழக மக்களிடையே குழப்பத்தை திமுக ஏற்படுத்தி வருகிறது. தமிழக மக்கள் தி.மு.க.வை இனி ஒருபோதும் நம்ப மாட்டார்கள். அவர்களுக்கு பாடம் புகட்ட தயாராகி விட்டனர்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்