தற்போதைய செய்திகள்

சுய உதவிக்குழு பெண்கள் தொழில் தொடங்க உதவி – அமைச்சர் பி.தங்கமணி உறுதி…

நாமக்கல்:-

சுய உதவிக்குழு பெண்கள் தொழில் தொடங்க உதவி செய்யப்படும் என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மு.ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது. கழக பொதுக்குழு உறுப்பினரும், திருச்செங்கோடு தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான பொன்.சரஸ்வதி முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் ரூ.97.23 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி பூமிபூஜையிட்டு துவக்கி வைத்தார்.

முதலாவதாக, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தண்ணீர் பந்தல்பாளையம் ஊராட்சி, வால்ராசப்பாளையத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி மற்றும் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினையும், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.11.23 லட்சம் மதிப்பீட்டில் மோடமங்கலம் முதல் சன்னியாசிப்பட்டி வரை கோரகாட்டம்பாளையம் வழியாக செல்லும் சாலையினை புதுப்பித்தல் பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.71 லட்சம் மதிப்பீட்டில் தண்ணீர் பந்தல்பாளையத்தில் ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் கட்டுதல் பணியினையும் அமைச்சர் பி.தங்கமணி பூமிபூஜையிட்டு அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

தண்ணீர் பந்தல்பாளையம் ஊராட்சி அதிக தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்கள் வசிக்கின்ற தன்னிறைவு அடைந்த ஊராட்சியாக இருக்கின்றது. இந்த ஊராட்சியை பொறுத்த வரையில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்கிடும் வகையில் வால்ராசப்பாளையத்தில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்கத்தொட்டி அமைத்திட சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

அம்மா அவர்கள் ரூ.400 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டத்தினை அறிவித்து அப்பணிகள் நடைபெற்று கொண்டுள்ளன. அதனடிப்படையில் இப்பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை முழுமையாக தீர்க்கப்பட்டு, இன்னும் 30 ஆண்டு காலத்திற்கு குடிநீர் பற்றாக்குறை இல்லாத பகுதியாக உருவாக்கப்பட்டு வருகின்றது.

மேலும், கோரகாட்டம்பாளையம் வழியாக செல்லும் மோடமங்கலம் முதல் சன்னியாசிப்பட்டி வரை உள்ள சாலை பழுதடைந்து உள்ளதால், அச்சாலையினை புதுப்பித்து வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டு அதற்கு தேவையான நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மகளிர் குழுவின் முக்கியத்துவத்தினை உணர்ந்து இப்பகுதியில் ரூ.4.50 லட்சம் மதிப்பில் இடம் வாங்கி அரசிடம் ஒப்படைக்கப்பட்டு, இன்றைய தினம் ரூ.71 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய மகளிர் சுய உதவிக்குழு கட்டடம், மகளிர் சுய உதவிக்குழு அலுவலகம் மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்கான இடமாக செயல்படும் வகையில் கட்டப்படவுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த மகளிர் தையல் இயந்திரம் வாங்கி திருப்பூர் உள்ளிட்ட மற்ற பகுதிகளிலிருந்து ஆடைகளை எடுத்து வந்து தையல் பணிகளை மேற்கொண்டு தொழில் செய்து வருமானம் ஈட்டி வருகின்றார்கள். மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த மகளிர் ஏற்கனவே வேறு தொழில் செய்து வந்தாலும், மேற்கொண்டு புதிய தொழில் தொடங்க விரும்பினால் மாவட்ட நிர்வாகம் உதவிட தயாராக உள்ளது. தண்ணீர் பந்தல்பாளையம் பள்ளிக்கு குடிநீர் வசதி, சமையல் கூடம், ஆய்வுக்கூடம் உள்ளிட்டவற்றை அமைத்துத்தர கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் ரூ.18 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு ஆய்வுக்கூடம் கட்டித்தரப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிச்சுற்றுசுவர் அமைத்திட விரைவில் தொகுதிமேம்பாட்டு நிதி திட்டத்திலிருந்து போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தண்ணீர்பந்தல்பாளையம் பள்ளியானது மாவட்டத்திலேயே தொடர்ந்து 10,11,12 வகுப்பு தேர்வுகளில் 100 சதவிகிதம் தேர்ச்சிபெற்று வரும் பள்ளியாக சிறந்து விளங்குகின்றது. மேலும், பிற ஊராட்சிகளுக்கு எடுத்துக்காட்டாக சுற்றுச்சூழலை பாதுகாத்து, மழை பொழிவை அதிக அளவில் பெறும் வகையில் இந்த ஊராட்சியில் சாலையோரங்களில் இருபுறங்களிலும் அதிக அளவில் மரங்கள் நடப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.

முன்னதாக வால்ராசப்பாளையம் ஊராட்சி; ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சாரண, சாரணியர் இயக்க மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்.