தற்போதைய செய்திகள்

திருச்சி எழில்மிகு நகரமாக உருவாக கழக அரசு துணை நிற்கும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி…

திருச்சி:-

திருச்சி எழில்மிகு நகரமாக உருவாக கழக அரசு துணை நிற்கும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகரத்தில் தமிழ்நாடு காவல்துறை மூலம் ரூ.118.6 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள் துவக்க விழா மற்றும் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமை வகித்தார். திருச்சி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் டி.ரத்தினவேல் எம்.பி., திருச்சி காவல் ஆணையர் முனைவர் அ.அமல்ராஜ், மத்திய மண்டல காவல் துறைத்தலைவர் வெ.வரதராஜு, திருச்சி மாநகர் மாவட்டக் கழக செயலாளர் ப.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் திருச்சி மாநகர் மாவட்டக் அவைத்தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு ரூ.118.6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

இவ்விழாவில் திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் பல்நோக்கு கட்டடம் மற்றும் ரவுண்டானவை திறந்து வைத்து பேசியதாவது:-

திருச்சி மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளுர் வளர்ச்சி திட்ட நிதியிலிருந்து ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் கே.கே.நகரில் பல்நோக்கு கட்டடம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சி மாநகர ஆயுதப்படையில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்களிப்புடன் தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ.22.70 லட்சம் மதிப்பீட்டில் மின்னொளி கூடைப்பந்து மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஊர் காவல்படை சார்பாக ஊர் காவல்படை வட்டார தளபதி அல்.சிராஜுதீன் சொந்த நிதியிலிருந்து ரூ.4.20 லட்சம் மதிப்பீட்டில் டி.வி.எஸ்.டோல்கேட் அருகில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.

ஜமால் முகமது கல்லூரி அருகில், கல்லூரி நிர்வாகத்தின் நிதியிலிருந்து ரூ.6.70. லட்சம் மதிப்பீட்டில் 24மணி நேரமும் திறந்து இருக்கும் குளிர்சாதன வசதி கொண்ட பயணியர் நிழற்குடை மற்றும் பல்நோக்கு கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் மையம் ஆகியவை மாநகர வளர்ச்சிக்காக, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டது.

புரட்சித்தலைவி அம்மா வழியில் சிறப்பாக செயல்பட்டுவரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான கழக அரசு மக்கள் நலம் பெறும் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டுவரும் திருச்சி மாநகராட்சி இந்தியாவிலேயே வாழ்வதற்கு உகந்த மாநகராட்சியாகவும் சுகாதாரத்தை கடைபிடிக்கும் மாநகராட்சியாகவும் சிறந்து விளங்குகிறது.

தமிழ்நாட்டிலேயே திருச்சி மாநகராட்சி தூய்மையை கடைபிடிக்கும் முதன்மை மாநகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருச்சி காவல் ஆணையர், மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதால் இயற்கையான, நேர்த்தியான, எழில்மிகுந்த மாநகராட்சியாக திருச்சி மாநகராட்சி உருவாகி வருகிறது.

திருச்சி மாவட்டத்திற்கு என்னென்ன மக்கள் நல திட்டங்கள் தேவைப்படுகிறது என்பதை அறிந்து பல இடங்களில் மாநகராட்சியின் மூலம் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடைபயிற்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மாநகரம் முழுவதும் குற்றங்களை களைவதற்கும், குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும் சுமார் 1000 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாநகரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இன்னும் பல நல்ல திட்டப்பணிகள் செயல்படுத்துவதற்கு முயற்சியெடுத்தால் அரசின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கவனத்திற்கு எடுத்துச்சென்று திருச்சி மாநகரம் எழில்மிகு நகரமாக உருவாக நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், திருச்சி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையர் என்.எஸ்.நிஷா, குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஆ.மயில்வாகனன், திருச்சி மாநகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரன், ஜமால் முகமது செயலர் மற்றும் தாளாளர் டாக்டர்.ஏ.கே.காஜா நஜீமுத்தீன், ஊர் காவல் படைவட்டார தளபதி அல்.சிராஜீத்தீன், அரியலூர் ராம்கோ சிமெண்ட் துணைத்தலைவர் ச.ராமராஜ், ராம்கோ சிமெண்ட் உதவி துணைத்தலைவர் சி.ரவிச்சந்திரன், ஐசிஐசிஐ வங்கி மண்டல முதன்மை அதிகாரி இராகவேந்திர வெங்கடகிரி, சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடி தலைவர் எஸ்.சகாதேவ்பாண்டின், அமராவதி கூட்டுறவு சிறப்பங்காடி தலைவர் ஏர்போர்ட் விஜி மற்றும் காவல்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.