சிறப்பு செய்திகள்

சென்னையில் குடிநீர் பணிகளை கண்காணிக்க மண்டல அளவில் குழுக்கள் அமைப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…

சென்னை:-

சென்னையில் 190 நாட்களாக மழை இல்லாத காரணத்தால் குடிதண்ணீர் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இதை சமாளிக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குடிநீர் விநியோகத்தை கண்காணிக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக மண்டல வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

மற்ற மாநிலங்களில் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு அரசுக்கு எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு தருகின்றன. இங்கு இயற்கையால் ஏற்படும் பாதிப்புகளை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். அதேபோல் தண்ணீர் பிரச்சினை குறித்து வெளி வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக் கொண்டார். தண்ணீர் இல்லாமல் எந்த உணவகங்களும் மூடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் .எஸ்.பி.வேலுமணி தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 14 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகள் மற்றும் 12,524 ஊராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகம், கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை, உள்ளாட்சி அமைப்புகளால் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் விநியோகப் பணிகள் ஆகியவை குறித்தும மாநில அளவில் அலுவலர்களிடம் பெருநகர சென்னை மாநகராட்சியின் அம்மா மாளிகை கூட்டரங்கத்தில் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் குடிநீர் விநியோகப் பணிகளை மேற்கொண்டு வரும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி நிர்வாகத்துறை, பேரூராட்சிகள் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகம், அவற்றின் அளவு மற்றும் நீர் இருப்பு குறித்தும் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது தமிழ்நாட்டில், 2016-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக மிக குறைந்த அளவில் மழை பெய்துள்ளது. பருவமழை பொய்த்த காரணத்தால் கோடைக்காலத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் பொருட்டு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகம், கோடைக்காலத்தில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் குடிநீர் வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் அலுவலர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

கூட்டத்தின் போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்ததாவது:-

தமிழகத்தில் உள்ள சென்னை நீங்கலான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கோடைக்கால குடிநீர்த் தேவையை சமாளிக்க மொத்தம் சுமார் ரூ.675 கோடி மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், பழைய ஆழ்துளை கிணறுகளை புதுப்பித்தல், லாரிகள் மூலம் குடிநீர் வழங்குதல், உள்ளிட்ட வறட்சி நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில், மட்டும் குடிநீர் திட்டப் பணிகளுக்காக அம்மா அவர்களின் அரசால் ரூ.15,838 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 2638.42 கோடியில் 4,098 பணிகளும், தமிழ்நாடு குடிநீர் வாரியம் முலம் 5,346 கோடியில் 268 குடிநீர் பணிகளும், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் –ரூ.4,409 கோடியில் 6,834 குடிநீர்ப் பணிகளும், பேரூராட்சி பகுதிகளில் ரூ. 196 கோடியில், 4,417 பணிகளும், ஊரகப் பகுதிகளில் ரூ. 1,929 கோடியில் 1.08 லட்சம் குடிநீர்ப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அம்ரூத் திட்டத்தின் கீழ், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 18 பெரிய குடிநீர்த் திட்டப் பணிகள் ரூ.6496 கோடியில் நடைபெற்று வருகின்றன

இன்றைய தேதியில், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்ததால், நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மொத்த குடிநீரின் அளவு தற்போதைய நிலையில் 7,300 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகரில் இன்றைய தேதியில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் நீர் இருப்பு 26 மில்லியன் கன அடி அளவே உள்ளது. வீராணம் ஏரியிலிருந்து தினசரி 543 மில்லியன் கன அடி நீர் பெறப்பட்டு மாநகர குடிநீர் விநியோகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் இதே நாளில் 2,542 மில்லியன் கன அடியாக இருந்தது.

சென்னை மாநகருக்கு தினமும் ஜூலை 1ம் தேதி முதல் நவம்பர் 2019 மாதம் வரை மழை பொழிவு இல்லாவிடினும், நெம்மேலி மற்றும் மீஞ்சூர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் மூலம் 180 MLD குடிநீரும், வீராணம் ஏரியிலிருந்து 90 MLD குடிநீரும், நெய்வேலி சுரங்கத்திலிருந்து 60 MLD குடிநீரும், நெய்வேலி பகுதியில் ஏற்கனவே உள்ள 22 ஆழ்துளை கிணறுகளிலிருந்து 20 MLD குடிநீரும், இதே பகுதியில் புதிதாக போடப்பட்டுள்ள 9 ஆழ்துளை கிணறுகளிலிருந்து 10 MLD குடிநீரும், திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம்,

பூண்டி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள தனியார் ஆழ்துளை கிணறுகள் மூலம் 110 MLD குடிநீரும், மாகரல் & கீழானூர் பகுதிகளில் குடிநீர் வாரியம் அமைக்கப்பட்ட 13 ஆழ்துளை கிணறுகள் மூலம் 15 MLD குடிநீரும், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் 20 MLD குடிநீரும், ரெட்டை ஏரி மற்றும் எருமையூர் கல்குவாரி ஆகியவற்றிலிருந்து 2 மாத காலத்திற்கும், அதன் பின்னர் 9/2019 முதல் 11/2019 வரை அயனம்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஏரிகளிலிருந்து தலா 10 MLD வீதம் மொத்தம் 20 MLD குடிநீரும், ஆக மொத்தம் நவம்பர்-2019 மாதம் முடிய 525 MLD குடிநீர் சென்னை மாநகருக்கு வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள குடிநீர் கட்டமைப்புகளுக்கு தகுந்தவாறு நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளால், குடிநீர் விநியோகம் தொய்வின்றி வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தற்போது நிலவும் சூழ்நிலையில் வீண் வதந்திகளை நம்பி, செயற்கையான தட்டுப்பாட்டினை உருவாக்க வேண்டாம். எதிர்கட்சிகள், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, வீண் வதந்திகளை பரப்பக் கூடாது.

சென்னை மாநகரில், குடிநீர் விநியோகப் பணிகளை கவனிக்க ஒவ்வொரு மண்டலத்திற்கும் 1 கண்காணிப்பு பொறியாளர், 1 செயற்பொறியாளர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்படும். மேலும், 3 மண்டலங்களுக்கு ஒரு தலைமை பொறியாளர் வீதம் இக்குழுக்களின் பணிகளை தினமும் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சியிலுள்ள அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், இரு மண்டலங்களுக்கு ஒருவர் வீதம் 15 மண்டலங்களிலும், காலை 6 மணி முதல் குடிநீர் விநியோகப் பணிகளை பார்வையிட்டு குறைகளை நிவர்த்தி செய்வார்கள். சென்னை மாநகரில் 200 வார்டுகளிலுள்ள பணிமனை பொறியாளர்களின் குடிநீர் விநியோக பணிகளை கண்காணிக்க கைசால் ஆப் என்ற செயலி மூலம் அவர்கள் ஆய்வு செய்யும் இடம், நேரம் போன்றவை தலைமை அலுவலகத்திலிருந்து கண்காணிக்கப்பட்டு உடனுக்குடன் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.

சென்னை குடிநீர் வாரியத்தில், குடிநீர் மற்றும் அனைத்து விதமான புகார்களை தெரிவிக்க சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் வாரத்தின் 7 நாட்களும் 24 ஒ 7 மணி நேரமும் 044-45674567 என்ற தொலைபேசி எண்ணில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு பகுதிக்கும் பகுதிப் பொறியாளர்கள் வாரியாக கட்டணமில்லா தொலைபேசி ஒன்று நிறுவப்பட்டு குடிநீர் பற்றிய புகார்கள் மட்டும் சிறப்பினமாக பெறப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கும், குடிநீர் விநியோகப் பணிகளை கண்காணிக்க செயலி ஒன்றும், மாநகராட்சிகளைப் பொறுத்தவரை மண்டல வாரியாக செயலி ஒன்றும், பேரூராட்சிகளைப் பொறுத்தவரை மாவட்ட அளவில் செயலி ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும்.ஊராட்சிகளைப் பொறுத்தவரை ஊராட்சி ஒன்றியம் வாரியாக 385 ஊராட்சி ஒன்றியங்களிலும் குடிநீர் புகாருக்கென தனி செயலியும், கட்டணமில்லா தொலைபேசியும் உருவாக்கப்படும். இச்செயலிகள் வழியாக குடிநீர் பற்றிய புகார்கள் மட்டும் பெறப்பட்டு, புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து புகார்தாரருக்கு பதில் அளிக்கப்பட வேண்டும். மேலும், கட்டணமில்லா தொலைபேசி மற்றும் மற்றும் தனி செயலியில் பெறப்படும் குடிநீர் பற்றிய புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தைப் பொறுத்தவரை மேலாண்மை இயக்குநராலும், பெருநகர சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை ஆணையராலும், நகராட்சி நிர்வாகத்தைப் பொறுத்தவரை நகராட்சி நிர்வாக ஆணையர் மற்றும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநராலும், பேரூராட்சிகளைப் பொறுத்தவரை பேரூராட்சிகளின் இயக்குநராலும், உதவி இயக்குநராலும், ஊரக வளாச்சித் துறையை பொறுத்தவரை ஊரக வளர்ச்சித் துறை இயக்குநராலும், திட்ட அலுவலர்களாலும் அன்றாடம் இச்செயலியின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.

குடிநீர் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். மேலும், குடிநீர் விநியோகக் குழாய்களில் அடைப்புகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீரை குடிநீர் பயனுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பூங்கா, செடிகொடிகள், மரங்கள் போன்றவற்றிற்கு குடிநீரை பயன்படுத்தக் கூடாது. பொதுக் குழாய்களில் தண்ணீர் வீணாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் குளியல் தொட்டிகள் மற்றும் ஷவர் குளித்து தண்ணீர் வீணாவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாநகராட்சி / நகராட்சி ஆணையர்கள், மண்டல இயக்குநர்கள், பேரூராட்சி உதவி இயக்குநர்கள், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் குடிநீர் பிரச்சனை தீர்க்க வார்டுக்கு ஒரு பொறுப்பான அலுவலரை நியமனம் செய்ய வேண்டும்.

ஊரக வளர்ச்சித் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் அன்றாடம் தேவையான அறிவுரைகள் வழங்கி குடிநீர் பிரச்சனையை தீர்க்க வழி வகுப்பார்கள். ஆணையர்கள், பொறியாளர்கள் உட்பட அனைத்து அலுவலர்களும் அன்றாடம் குடிநீர் வழங்கல் பணிகளை காலை 6 மணி முதல் நேரில் ஆய்வு செய்தும், மாலையில் அனைத்து அலுவலர்களுடன் கலந்தாய்வு செய்து பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும்.

குடிசைப் பகுதிகளிலும், ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் அதிக கவனம் செலுத்தி சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும். பொதுமக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமான பயன்படுத்த ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண்களையும், செயலியின் செயல்பாட்டு விவரங்களையும், பொதுமக்கள் எவ்வாறு அணுகுவது என்பது பற்றி விரிவாக நாளிதழ்கள் மற்றும் ஊடகங்கள் செய்தியாக வெளியிடப்பட வேண்டும். கட்டணமில்லா தொலைபேசி செயல்பாடு மற்றும் செயலி செயல்பாடுகளை கண்காணிக்க ஒவ்வொரு உள்ளாட்சியிலும் இரு பொறுப்பான அலுவலர்களை பொறுப்பாக்க வேண்டும்.

பருவமழை பொய்த்ததன் காரணமாக கோடைக்கால குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க பொதுமக்கள் அனைவரும் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமான முறையில் பயன்படுத்த வேண்டும். மேலும், பொதுமக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமான முறையில் குடிநீர் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்த ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.