உலகச்செய்திகள்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…

லாஸ் ஏஞ்சல்ஸ்:-

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் விரிசல்கள் ஏற்பட்டு சேதமடைந்தன. சாலைகளில் பல்வேறு இடங்களில் பிளவுகள் ஏற்பட்டன.

இந்த நிலையில், அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. சக்தி வாய்ந்த இந்நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 150 மைல்கள் தொலைவில் உணரப்பட்ட நிலநடுக்கத்தினால் நகரில் பல கட்டிடங்கள் குலுங்கின. பல பகுதிகளில் மின்சார வினியோகம் தடைப்பட்டது.

ஆனால் பெரிய அளவில் சேதங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலநடுக்கம் முந்தைய நாட்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினை விட 11 மடங்கு வலிமையானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

20 வருடங்களுக்கு பின் ஏற்பட்ட வலிமையான நிலநடுக்க தாக்கத்தினால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பு நிறைந்த இடங்களில் தஞ்சமடைந்தனர். இதுபற்றி ஜெஸ்சிகா என்ற பெண் கூறும்பொழுது, ஒரு நிமிடம் நிலநடுக்கம் நின்றது. பின் மீண்டும் அதிர்வு ஏற்பட தொடங்கியது. இதனால் திரும்பி வீட்டிற்கு செல்வது அசவுகரியம் ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.