சிறப்பு செய்திகள்

ஈரானில் தவிக்கும் 300 தமிழர்கள் உள்பட 450 மீனவர்களை உடனே மீட்க வேண்டும் – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை

ஈரானில் தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த 300 மீனவர்கள் உள்பட 450 இந்திய மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஈரான் நாட்டின் பல்வேறு துறைமுகங்களில், பல்வேறு மீன்பிடி படகுகளில் தமிழகத்தை சேர்ந்த 300 மீனவர்கள் உள்பட இந்தியாவை சேர்ந்த 450 மீனவர்கள் நலன் தொடர்பாக உங்களது மேலான கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். ஈரானில் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த மீனவர்கள் கிஷ், சீரூ மற்றும் ஈரானின் இதர துறைமுகங்களில் தவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எனவே அந்த மீனவர்களை ஈரானில் இருந்து உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவிற்கு அந்த மீனவர்கள் பாதுகாப்பாகவும், உடனடியாகவும் திரும்ப ஈரானில் உள்ள இந்திய தூதரகம் தேவையான ஆதரவையும், உதவியையும் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.