தற்போதைய செய்திகள்

நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளை பிரித்து தர மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் பேரவையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்

சென்னை

நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளை பிரித்து தர ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளது என்று பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட் பட்ட கொரட்டூர் கிராம நியாய விலை கடையை பிரித்து குச்சிபாளையம் கிராமத்தில் புதிய பகுதி நேர நியாய விலை கடையை அமைக்க அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுப்பினர் கோரிய பகுதி சட்ட விதிகளுக்கு உட்பட்டு இருப்பதால், 1.3.2019 அன்றே புதிய பகுதி நேர நியாய விலை கடை திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மறைந்த முதல்வர் அம்மாவின்ஆட்சியில் 626 முழு நேர நியாய விலைக்கடைகளும், 1,752 பகுதி நேர நியாய விலை கடைகளும் மொத்தமாக 2,428 நியாய விலை கடைகள் செயல்படுகின்றன. அதேபோல் 37 நகரும் நியாய விலை கடைகளும் இயங்குகின்றன.

தாய் கடையிலிருந்து பகுதி நேர கடையை பிரிக்க வேண்டுமென்றால், பகுதி நேர கடை உள்ள பகுதியில் 150 கார்டுகளும், தாய் கடையில் 500 கார்டுகளும் இருக்க வேண்டும். அதேபோல் மாவட்ட ஆட்சியர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சமூக பிரச்சினை உள்ள பகுதிகளில் மாவட்ட ஆட்சியரே பகுதி நேர கடைகளை துவக்கலாம். நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள கடைகளையும் பிரித்து தர ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளது என்றார்.