சிறப்பு செய்திகள்

கழகம் வென்றிட உழைப்போம் களம் அனைத்திலும் வெல்வோம் – ஒருங்கிணைப்பாளர்கள் மடல்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி சரித்திரம் படைக்கும் வெற்றியை பெறுவோம். கழகம் வென்றிட உழைப்போம், களம் அனைத்திலும் வெல்வோம் என்று கழக உடன்பிறப்புகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கழகத்தின் இரு கண்களாக போற்றப்படும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கழக உடன்பிறப்புகளுக்கு எதியுள்ள மடல் வருமாறு:-

எங்கள் இதயம் கவர்ந்த கழக உடன் பிறப்புகளே,

மக்களாட்சித் தத்துவத்தின் நாற்றங்கால் என்று போற்றப்படும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு மேற்கொண்ட கடும் முயற்சிகள் காரணமாக, 27.12.2019, 30.12.2019 ஆகிய தேதிகளில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2016-ஆம் ஆண்டிலேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்து ஜனநாயகத்தை மேலும் வலுப்பெறச் செய்ய வேண்டும் என்று தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு, தேர்தல் பணிகளை முடுக்கிவிடச் செய்தார்கள். ஆனால், தோல்வி பயத்தில் சுருண்டு கிடந்த திமுக, நீதிமன்ற வழக்குகள் வழியாக அப்போது தேர்தலை நடத்த தடை பெற்றது. “ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை’’ என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் கொள்கை முழக்கத்தைப் போல, கழக அரசு மேற்கொண்ட முயற்சியால் இப்போது
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது.

“எனக்குப் பின்னாலும் கழகம் பல நூறு ஆண்டுகள் தமிழகத்தில் மக்கள் தொண்டாற்றும்’’ என்ற புரட்சித் தலைவியின் தீர்க்க தரிசன வார்த்தைகளுக்கு ஏற்ப, நம் அரசியல் எதிரிகள் அஞ்சி நடுங்கும் அளவுக்கு விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது; கழக உடன்பிறப்புக்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் வீறுகொண்டு எழுந்து, உற்சாகத்துடன் களப்பணி ஆற்றி வருவதைப் பார்க்கும்போது
மிகுந்த மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைகிறோம்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் ஆசி உள்ளவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?””, கழகத்தின் வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் என்ற பெருமிதம் நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.எனக்குப் பின்னாலும் பலநூறு ஆண்டுகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக மக்களுக்குத் தொண்டாற்றும் என்று 1973-ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் முழங்கினார். அதையே மிகத் தெளிவாகவும், அழுத்தம் திருத்தமாகவும் 2016-ல் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்தார்கள்.

நம் இரு கண்களாகத் திகழும் அந்த மகத்தான தலைவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மக்கள் இயக்கமாக ஓங்கி வளர்ந்து, தலைமுறை தலைமுறையாக தமிழர்கள் பயன்பெறக் கூடிய அளவுக்கு மக்களுக்குப் பணியாற்ற வேண்டும்; அந்தப் பணிகளால் தமிழகம் செழித்தோங்கி வளர வேண்டும் என்று தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தார்கள். புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அமைத்துத் தந்திருக்கும் கழக அரசு, அந்த மாபெரும் தலைவர்கள் காட்டிய வழியில் பார்போற்றும் வண்ணம் மக்கள் பணிகளை செய்துகொண்டிருக்கிறது.

கழக அரசின் எண்ணிலடங்கா சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி, இந்த சாதனைகள் தொடரவும், இன்னும் பல சாதனைகளைப் புரிந்திடவும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்குப் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கும், கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று, கழக உடன்பிறப்புகளை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட மிகச் சிறப்பாக இருப்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. உங்கள் அன்புச் சகோதரர்களாகிய நாங்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் காரணமாக, பல்லாயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளைப் பெறும் வகையில் புதிய தொழில்கள் தமிழ் நாட்டில் தொடங்கி நடைபெறுகின்றன. குடிமராமத்து, நீர்ப்பாசன மேலாண்மை, குடிநீர்த் திட்டங்கள் போன்றவற்றால் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதோடு, தமிழகத்தின் தண்ணீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

கோதாவரி-காவேரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்பிற்கு பிரம்மாண்ட திட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, கடந்த ஆண்டைப் போலவே, பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1,000/- ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழ் நாட்டில் கழக ஆட்சியில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளும், ஒரு ஏய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியும் கட்டப்படும் சரித்திர சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இவற்றைத் தவிர, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அறிமுகம் செய்த அனைத்து மக்கள் நலப் பணிகளும், விலையில்லாது பொருட்களை வழங்கி, தமிழ் நாட்டு மக்களை, குறிப்பாக நம் தாய்மார்களையும், அன்புச் சகோதரிகளையும் காக்கும் அற்புதத் திட்டங்கள் எல்லாமும் மிகத் திறம்பட நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கழக நிரந்தரப் பொதுச் செயலாளர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர், மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க பல்வேறு திட்டங்களையும்; அந்த இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு செயல்பட்டு வரும் கழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களையும், மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருவது நம் ஆட்சியின் சிறப்பை உணர்த்தும்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆற்றி வரும் எண்ணற்ற பணிகளை எல்லாம் கழக உடன்பிறப்புகள் மக்களுக்கு விரிவாக எடுத்துக்கூற வேண்டும்.

தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நம் பேச்சாளர்களும், கலைக் குழுவினரும், தெருமுனைப் பிரச்சாரம் செய்யும் கழகத்தினரும், கழக அரசின் சாதனைகளை விளக்கிக் கூறி, இந்த சாதனைகள் தொடர்ந்து நடைபெற்றிட, கழக வேட்பாளர்களுக்கும், கழகத்தின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

கழக அரசின் சாதனைகளில் எல்லாம் மிகவும் குறிப்பிடத்தக்கது, தமிழ் நாட்டில் அராஜகத்தை அழித்து, ரவுடிகள் ராஜ்ஜியத்தை ஒழித்து, எல்லோருக்கும் பாதுகாப்பு அளிக்கும் சிறப்பான சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு என்ற மகத்தான சாதனை கழக அரசின் புகழுக்கு பெருமை சேர்க்கும் சாதனை என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். இந்த சாதனைகளை ஒவ்வொரு வாக்காளரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கிக் கூறி வாக்கு சேகரிப்பது அவசியமாகும்.

புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நம்மோடு இல்லை என்றபோதும், அவரிடம் நாம் பயின்ற அரசியல் ஒழுங்கும், கட்டுப்பாடும் நம்மை வழிநடத்துகின்றன. எனவே, ராணுவக் கட்டுப்பாட்டோடு செயல்படும் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெருமைக்கு ஏற்ப கழக உடன்பிறப்புக்கள் ஒற்றுமையுடனும், துடிப்புடனும் பணியாற்ற வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல் பணிகளை நெறிப்படுத்தி, வெற்றியை ஈட்டிட கழகத்தின் சார்பில் மாவட்டம் வாரியாக மேற்பார்வைக் குழுக்களை அமைத்திருக்கிறோம். அந்தக் குழுவினரோடு ஒன்றிணைந்து கழக உடன்பிறப்புக்கள் ஒற்றுமையாக தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும். கழகத்தின் பிரம்மாண்ட வெற்றி ஒன்றே எப்போதும் நம் குறிக்கோளாக இருந்திட வேண்டும் என்பதை உங்கள் ஒவ்வொருவருக்கும் நினைவுபடுத்துகிறோம்.

கழக உடன்பிறப்புகள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது, நமக்காகவே தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்த இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கையாக இருக்கும். கழக வேட்பாளர்களின் வெற்றியை நன்றி மலர் மாலையாக்கி புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் நீடுதுயில் கொள்ளும் புண்ணிய மண்ணில் சமர்ப்பிக்க சபதம் ஏற்போம்!உழைப்போம்! உழைப்போம்!! கழகம் வென்றிட உழைப்போம்!!!வெல்வோம்! வெல்வோம்!! களம் அனைத்திலும் வெல்வோம்!!!உங்கள் உழைப்பின் மீதும், கழக விசுவாசத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டு நன்றி கூறுகிறோம்.