தற்போதைய செய்திகள்

123 தேசிய விருதுகளை பெற்று உள்ளாட்சித்துறை சாதனை – பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்

சென்னை

உள்ளாட்சித்துறையில் 123 தேசிய விருதுகளை பெற்று சாதனை படைத்திருக்கிறோம் என்று பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதத்துடன் கூறினார்.

சட்டப்பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் தி.மு.க. கொறடா சக்கரபாணி பேசினார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் 40 ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. முன்பு இதில் 12 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வந்தார்கள். இப்போது அது 3 ஆயிரமாக குறைந்துள்ளனர். வாரியத்தை மூடிவிட்டு தனியாருக்கு கொடுக்க அரசு
முயற்சிப்பதாக தெரிகிறது என்று சக்கரபாணி பேசியதுபோது குறுக்கிட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளைவிட 3 மடங்கு அதிக சாதனைகளை அம்மாவின் அரசு செய்திருக்கிறது. இந்தியாவிலேயே குடிநீர் வழங்குவதில் அம்மாவின் அரசும், எடப்பாடியாரின் அரசும் எடுத்து சாதனைகள் அதிகம்.

குடிநீர் திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். அம்மாவின் ஆட்சியிலும் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆட்சியிலும் ரூ.39 ஆயிரத்து 849 கோடியில் 4.58 லட்சம் பணிகள் நடைபெற்று இருக்கின்றன. 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி ஏற்பட்டது. அதனை மிகவும் திறமையாக சமாளித்தோம். தமிழகத்தில் கிருஷ்ணா தண்ணீரை பெற என்னையும், அமைச்சர் டி.ஜெயக்குமாரையும் முதலமைச்சர் ஆந்திராவுக்கு அனுப்பி வைத்தார். அதன் பயனாக 6.4 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்தது. அதனை ஆந்திர அரசு குறைத்தது. எனவே மீண்டும் எங்களை முதலமைச்சர் அங்கு அனுப்பி வைத்தார். அதன் பயனாக கூடுதல் தண்ணீர் வருகிறது.

இந்தியாவிலேயே 99 சதவீதம் குழாய் வழியாக குடிநீர் வழங்குவது தமிழ்நாட்டில் தான்.ஒக்கேனக்கல் குடிநீர் திட்டம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டம். இந்த திட்டம் ரூ.120 கோடியில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. அம்மா ஆட்சிக்கு வந்தபின் அந்த திட்டத்திற்கு ரூ.350 கோடி திருத்திய மதிப்பீடு செய்து பணிகளை துவக்கினார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் 18 சதவீத பணிகள் தான் நடைபெற்றது. மீண்டும் அம்மா ஆட்சிக்கு வந்த பின்னர் தான் 29.5.11 அன்று இந்த திட்டத்தை துவக்கி வைத்தார். குடிநீர் வடிகால் வாரியத்தை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. எந்த வாரியமும் மூடப்படமாட்டாது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

தொடர்ந்து சக்கரபாணி பசுமை வீடுகள் குறித்து பேசினார். இதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளிக்கையில்,
உங்கள் ஆட்சியில் 75 ஆயிரம் ரூபாய் தான் வீடு கட்ட கொடுத்தீர்கள். இப்போது நாங்கள் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம். இந்தியாவிலேயே அதிகமாக வீடுகளை கட்டிக் கொடுத்தது அம்மாவின் அரசு தான். மொத்தம் 16.36 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறோம். தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சிகளுக்கு ரூ.9 ஆயிரத்து 266 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அம்மாவின் ஆட்சியில் ரூ.19 ஆயிரத்து 896 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 3 ஆண்டுகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் ரூ.17 ஆயிரத்து 12 கோடி வழங்கியிருக்கிறோம். உள்ளாட்சிகளுக்கு அதிக நிதி கொடுத்தது அம்மாவின் ஆட்சியில் தான்.வீடு கட்டி கொடுப்பது பற்றி சொல்கிறீர்கள்.

உங்கள் ஆட்சியில் 75 ஆயிரம் ரூபாய் எப்படி வீடு கட்டினீர்கள். மத்திய அரசின் நிதி உதவியுடன் நடைபெறும் இந்த திட்டத்தில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் அதிக நிதியை வழங்கி உள்ளது. உள்ளாட்சித்துறையில் இந்த அரசு எண்ணற்ற சாதனைகளை செய்திருக்கிறது. எனவே 123 தேசிய விருதுகளை வாங்கியிருக்கிறோம். இப்போது மத்தியில் உள்ள பாரதிய ஜனதா ஆட்சியில் மட்டுமல்ல, காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதும் இந்த விருதுகளை வாங்கியிருக்கிறோம். தொடர்ந்து சாதனை படைத்து வருகிறோம் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.