தற்போதைய செய்திகள்

மின் கம்பங்களை நடுவதற்கு ஜேசிபி, கிரேன் ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்படும் உறுப்பினர் அரக்கோணம் ரவி கேள்விக்கு அமைச்சர் பி.தங்கமணி பதில்

சென்னை

மின் கம்பங்களை நடுவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஜேசிபி, கிரேன் பயன்படுத்தபடும் என்று உறுப்பினர் அரக்கோணம் ரவி கேள்விக்கு அமைச்சர் பி.தங்கமணி பதில் அளித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அரக்கோணம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரவி அரக்கோணம் தொகுதி, நெமிலி ஒன்றியம், நாகவேடு கிராமத்திற்கு புதிய துணை மின் நிலையம் அமைக்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் பி.தங்கமணி உறுப்பினர் தொகுதியான அரக்கோணம் தொகுதி, நெமிலி ஒன்றியத்தில், நாகவேடு கிராமத்தில் ஒரு துணை மின் நிலையம் வேண்டுமென்று கேட்டிருக்கிறார். அரசால் உத்தேசிக்கப் பட்டு, நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய உறுப்பினர் ரவி எனது அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட நாகவேடு மற்றும் அதனை சுற்றியுள்ள மேல்பாக்கம், பருத்திபுத்தூர், சித்தேரி, கீழாந்துறை, மேலாந்துறை, சம்பத்துராயன்பேட்டை, சிறுணமல்லி, அரும்பாக்கம், ஓச்சலம், மேலக்காடு, பாடி போன்ற கிராமங்களில் நீண்ட நாட்களாக குறைந்த மின்னழுத்தம் நிலவி வருகிறது. விவசாய மக்களும், நெசவாளர்களும் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இங்கு துணை மின் நிலையம் அமைக்கப்படுமா ? என்றார்.

இதற்கு அமைச்சர் பி.தங்கமணி, உறுப்பினர் கோரிய அந்த கிராமத்தில் 1.22 ஏக்கர் பட்டா நிலம் கையகப்படுத்தப் பட்டிருக்கிறது. 33/11 கிலோ வாட் போடுவதற்காக உத்தேசிக்கப்பட்டு உள்ளது. கூடிய விரைவில் அதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, 6 மாத காலத்திற்குள் முடிப்பதற்குண்டான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே உறுப்பினர் விண்டர்பேட்டையில் தனியாக ஒரு சப் ஸ்டேசன் கேட்டிருந்தார்.

அது 33 ஆக இருக்கிறது. அதை 110 ஆக உயர்த்தித்தர வேண்டுமென்று கேட்டிருக்கிறார். அந்த பணியும் இப்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆகவே, அதையும் விரைந்து முடித்துக் கொடுப்போம் என்பதை சொல்லி, ஏற்கெனவே இருக்கின்ற துணை மின் நிலையத்தில் 2X8 என்று சொல்லக்கூடிய 16 MVA மின்மாற்றிகள் இருக்கின்றன. ஆனால், அதனுடைய மின் பளு 11 தான் இருக்கிறது. இருந்தாலும்கூட, எதிர்காலத்தின் தேவையை கருதிதான், அம்மாவின் அரசு அந்த இடத்தில் ஒரு புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டுமென்று உத்தேசிக்கப்பட்டு, பட்டா நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது என்றார்.

தொடர்ந்து பேசிய உறுப்பினர் ரவி இன்றைக்கு தற்போது மின்கம்பங்கள் நடுவதற்கு மனித சக்தி பயன்படுத்தப்படுகிறது. மனித சக்தி குறைவாக இருக்கிற காரணத்தால், ஒவ்வொரு கோட்டங்களிலும் ஒரு ஜேசிபி அல்லது கிரேன் போன்ற இயந்திரங்கள் வாங்கி ஒவ்வொரு கோட்டத்திற்கும் வழங்கப்படுமா ? இதற்கு அமைச்சர் தங்கமணி இப்போது மின் கம்பங்கள் நடுவதற்கு ஜேசிபியை நாம் பயன்படுத்துகிறோம்.

அதை ஒப்பந்த அடிப்படையிலே தேவையான இடத்தில் நாம் அந்த ஜேசிபியை பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு கோட்டத்திற்கும் அதை வாங்கி கொடுக்கின்றபோது நிருவாக செலவு அதிகமாக ஏற்படுகின்ற காரணத்தால், எங்கே தேவைப்படுகிறதோ அங்கே ஒப்பந்த அடிப்படையில் பணிகள் தொய்வில்லாமல் விரைந்து நடப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றது என்று பதிலளித்தார்.