தற்போதைய செய்திகள்

விலை ஆதார திட்டத்தின் மூலம் 50 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் – சட்டப்பேரவையில் அமைச்சர் துரைக்கண்ணு அறிவிப்பு…

சென்னை:-

தமிழகத்தில் விலை ஆதார திட்டத்தின் மூலம் 50 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் இரா.துரைக்கண்ணு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். தமிழ்நாட்டில் கொப்பரை தேங்காயை குறைந்த பட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வது குறித்து அவையின் கவனத்தை ஈர்த்தார்.

இதற்கு வேளாண்மை துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு பதிலளித்து பேசியதாவது:-

தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விலை பொருட்களுக்கு நல்ல விலை தருவதற்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தற்போது தேங்காய் கொப்பரைகளின் விலை குறைந்துள்ளதால், தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில் விலை ஆதரவு திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரையை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் 4 லட்சத்து 35 ஆயிரத்து 621 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றிலிருந்து 470 கோடியே 64 லட்சம் தேங்காய்கள் உற்பத்தி ஆகின்றன. தேங்காய் விலை குறையும் போது விவசாயிகள் அவற்றை மதிப்புக்கூட்டி கொப்பரைகளாக விற்பனை செய்து வருகின்றனர். சமீபகாலமாக தேங்காய் கொப்பரைகளின் விலை குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைவாக இருந்து வருகிறது.

விலை ஏற்ற இறக்கத்திலிருந்து விவசாயிகளை பாதுகாத்து, தேங்காய் கொப்பரைகளுக்கு நல்ல விலை கிடைக்கும் பொருட்டு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், நாமக்கல், வேலூர், கோவை, மதுரை, சேலம், திருப்பூர், ஈரோடு, தேனி, தருமபுரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 50 ஆயிரம் மெட்ரிக் டன் தேங்காய் கொப்பரை குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

இந்த மாவட்டங்களில் உள்ள தென்னை விவசாயிகளிடமிருந்து தேங்காய் கொப்பரையை எளிதில் கொள்முதல் செய்வதற்காக கொள்முதல் மையங்களை திறப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பிரதமரிடம் நேரிலும், கடிதம் வழியாகவும் வலியுறுத்தி இருந்தார். தற்போது மத்திய அரசினால் 2019-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையான பந்து கொப்பரைக்கு கிலோ ஒன்றுக்கு 99 ரூபாய் 20 பைசா மற்றும் அரவை கொப்பரைக்கு கிலோவுக்கு 95 ரூபாய் 21 காசு என்ற அடிப்படையில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும். இந்த கொள்முதல் பணி நாளை முதல் அடுத்த 6 மாதங்கள் நடைபெறும்.

5 ஆயிரம் மெட்ரிக் டன் பந்து கொப்பரையும், 45 ஆயிரம் மெட்ரிக் டன் அரவை கொப்பரையும் கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. விவசாயிகள் கொள்முதல் நிலையங்களை அணுகி தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். பெயர்களை பதிவு செய்யும்போது, நில சிட்டா, அடங்கல், ஆதார அட்டை மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மத்திய அரசின் கொள்முதல் நிறுவனமான நாபெட் நிறுவனம் பரிந்துரைக்கும் குறைந்தபட்ச தரத்தில் கொப்பரை இருத்தல் வேண்டும். தமிழகத்தில் விலை ஆதாரத்திட்டத்தின் மூலம் 50 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தால், 25 ஆயிரம் மெட்ரிக் டன்னும், டான்செட் நிறுவனத்தால் 25 ஆயிரம் மெட்ரிக் டன்னும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக இலக்கு வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு கொப்பரை கொள்முதலுக்கான நிர்ணயிக்கப்பட்ட தரம் குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் மாவட்ட ஆட்சியர் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு கொள்முதல் செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தென்னை விவசாயிகளின் நலன் கருதி செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் இரா.துரைக்கண்ணு பதிலளித்தார்.