தற்போதைய செய்திகள்

தமிழகத்தின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் – ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி உறுதி…

மதுரை:-

தமிழகத்தின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி கூறினார்.

கழக மக்களவை குழு தலைவரும், தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ப.ரவீந்திரநாத்குமார் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- 

35 நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற தொடரில் 30 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த கூட்டங்களில் முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி தமிழகத்திற்கு வேண்டிய பல்வேறு திட்டங்களை வலியுறுத்தியுள்ளேன்.

குறிப்பாக இந்தியாவை ஒரு புதிய இந்தியாவாக கட்டமைப்பதில் சிறப்பான நிர்வாகத்தில் பிரதமர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் சிறப்பாக அமைந்து இருந்தது. சுதந்திர தினவிழாவுக்கு பிறகு வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரும் சிறப்பாக அமையும். மற்ற மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னுடன் நண்பர்களாக பழகி வருகின்றனர்.

தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா காலம் முதல் தற்போது முதலமைச்சரும், துணைமுதலமைச்சரும் செய்து வரும் திட்டப்பணிகள் எல்லாம் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னிடம் வியந்து பராட்டி வருகின்றனர். நாட்டின் உரிமைக்காக நான் குரல் கொடுத்து தான் வருகிறேன். நீட்தேர்வு தொடர்பாக முதலமைச்சரின் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் நான் நிச்சயம் பிரதிபலிப்பேன்.

வலிமையான இந்திய தேசத்தை உருவாக்க பிரதமர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவை உலக வல்லரசு நாடுகளுக்கு இணையாக உருவாக்க இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார். முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி நாடாளுமன்றத்தில் தொடர்ந்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி தமிழக வளர்ச்சிக்காக நான் என்றும் பாடுபடுவேன்.

இவ்வாறு ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. கூறினார்.