சிறப்பு செய்திகள்

வேலூர்-தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.2.9 கோடியில் உயர்மட்ட பாலங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்…

சென்னை:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் 2 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், வேலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 2 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 உயர்மட்ட பாலங்களையும் திறந்து வைத்தார்.

இதுகுறித்து அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதால் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. பல்வேறு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் போதிய இடவசதி இல்லாமல் சிறிய கட்டடங்களில் இயங்கி வருகின்றன.

வட்டார அளவில், அந்தந்த வட்டாரத்திற்கு தேவையான அனைத்து வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தும் அலகாக ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் திகழ்கின்றன. அந்தந்த வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள், தங்களின் அடிப்படை தேவைகளான வீட்டு வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்குகள், சாலை வசதி மற்றும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை அணுக வேண்டியுள்ளது.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பயன்பாட்டிற்காக 2 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், பேர்ணாம்பட்டு – ஓங்குப்பம் சாலையில் 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், பருவக்குடி வேம்பார் – ராமனூத்து சாலையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் மற்றும் புதூர் ஊராட்சி ஒன்றியம், மாவிலோடை சாலையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் என மொத்தம் 4 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் மற்றும் 3 உயர்மட்ட பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் முனைவர் கா.பாஸ்கரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.