தற்போதைய செய்திகள்

அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் ரூ.22 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்…

மதுரை:-

அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் ரூ.22 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட இருப்பதாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், மகபூப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மடிகணினி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மதுரை மாநகராட்சி ஆணையாளர் எஸ்.விசாகன் தலைமை வகித்தார்.

விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு 501 மாணவிகளுக்கு ரூ.61,48,773 மதிப்பிலான விலையில்லா மடிகணினிகளை வழங்கி பேசியதாவது:-

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிறந்த திறன்களை பெற அம்மா அவர்களால் 15.09.2011 அன்று விலையில்லா மடிகணினி வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2011-12 முதல் 2018-19 வரை ரூ.6332.37 கோடி மதிப்பிலான 47 லட்சத்து 62 ஆயிரத்து 388 மடிகணினிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2019-20-ல் 4,70,695 மாணவர்களுக்கு விலையில்லா மடிகணினிகள் வழங்கப்படும். மதுரை மாவட்டத்தில் 2011 முதல் 2018-19 வரை ரூ.229 கோடியே 36 லட்சம் மதிப்பிலான 1,91,120 மடிகணினிகள் வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 2019-20-ம் கல்வியாண்டில் 58675 மடிகணினிகள் ரூ.72 கோடியே 1 லட்சத்து 18 ஆயிரத்து 275 மதிப்பில் வழங்கப்படவுள்ளன. மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் ரூ.8,24,50,014 மதிப்பிலான 6718 மடிகணினிகள் வழங்கப்படவுள்ளன.2020-2021 கல்வி ஆண்டில் 28 லட்சத்து 64 ஆயிரத்து 885 மாணவர்களுக்கு ரூ.10 கோடி மதிப்பில் ஷூ, சாக்ஸ் வழங்கப்பட உள்ளது, ரூ.493 கோடி மதிப்பில் தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் 3 விதமான சீருடைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

2650 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 244 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் ரூ.22 கோடி மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் விலையில்லா மடிகணினி வழங்கப்பட்டுள்ளது. அதனால் தான் இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கை 25 சதவிகிதம் இருந்தபோதிலும் தமிழகத்தின் உயர்கல்வி சேர்க்கை மட்டும் 48 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர் சி.தங்கம், மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சோலைராஜா, மாவட்ட பாசறை செயலாளர் அரவிந்தன், பகுதி கழக செயலாளர்கள் தளபதி மாரியப்பன், பைக்காரா கருப்பசாமி, மகேந்திரன், வட்ட கழக செயலாளர் கார்னர் பாஸ்கரன், பரவை பேரூர் கழக செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.