சிறப்பு செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மாதம் ஷூ, சாக்ஸ் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

திருப்பூர்

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஜூன் மாதம் ஷூ, சாக்ஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

திருப்பூர் வடக்கு வட்டம், 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், தனியார் பங்களிப்புடன் ரூ.98.43 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இவ்விழாவில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

மறைந்தாலும் மக்கள் மனதில் என்றென்றும் வாழ்ந்து வருகின்ற புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தில் ஏழை, எளியோர் இல்லாத நிலை வேண்டும் என்பதற்காக இந்தியாவிலுள்ள பிற மாநிலங்கள் வியக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் எண்ணற்ற பல திட்டங்கள் செயல்படுத்தி வந்தார். குறிப்பாக, பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில், கல்வித்துறையில் மாணவ, மாணவிகளின் நலனுக்காக விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா நோட்டு புத்தகங்கள், விலையில்லா பேருந்து பயண அட்டைகள்,

விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் செல்வந்தர்கள் கையில் தவழும் விலையில்லா மடிகணினி உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் முதலமைச்சர் கல்வித்துறைக்கென பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து அதற்கான அதிகப்படியான நிதியினையும் ஒதுக்கி தந்துள்ளார். மேலும், நடப்பாண்டிற்கு பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறைக்கு மட்டும் ரூ.41,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக மாணவ, மாணவிகளின் நலனுக்காக, பல்வேறு வகையான திட்டங்களை கல்வித்துறையில் ஏற்படுத்தி வருகிறோம். தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்களும் மற்றும் ஸ்மார்ட் போர்டுகளும் அமைக்கப்படும். மேலும், வருகின்ற ஜூன் மாதம் அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் ஷூ மற்றும் சாக்ஸ்களும் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையை பொறுத்த வரையில், தனியார் பள்ளிகளுக்கு நிகராக நமது அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறந்த கல்வியாளராக உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில், மாணவ, மாணவிகளின் நலனுக்காக அரசு அளிக்கின்ற நலத்திட்டங்களை நல்ல முறையில் பெற்றுக்கொண்டு தங்களின் பெற்றோருக்கும் மற்றும் இச்சமுதாயத்திற்கும் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

முன்னதாக, பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முதலிபாளையம் உயர்நிலைப்பள்ளியில் தனியார் பங்களிப்புடன் (ரேட்டரி திருப்பூர் மற்றும் நெக்ஸ்ட் ஜெனரேசன்) ரூ.14.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களையும் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்து நன்கொடையாளர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினர்.